தமிழகத்தில் பயங்கரவாதம் தலைதூக்கும் அளவிற்கு மக்களின் பாதுகாப்பு முற்றிலுமாக சீர்குலைந்துள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், திண்டுக்கல் சிறுமலையில் மர்ம பொருள் வெடித்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியளிப்பதாக வேதனை தெரிவித்துள்ளார்.
இதனை NIA, ATS உள்ளிட்ட அமைப்புகள் விசாரித்து வரும் நிலையில், பேட்டரி வயர் மற்றும் வெடி பொருட்கள் உள்ளதால் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா என்ற சந்தேகம் நிலவுவதாக கூறியுள்ளார்.
ஏற்கனவே ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி சென்னையில் NIA-வால் கைது செய்யப்பட்டதை குறிப்பிட்டுள்ள எடப்பாடி பழனிசாமி
ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு சீர்கேடு என்ற நிலையைத் தாண்டி, பயங்கரவாதம் தலைதூக்கும் அளவிற்கு மக்களின் பாதுகாப்பு முற்றிலுமாக சீர்குலைந்துள்ளாக குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் நாடக வீடியோக்கள் மீதான நாட்டத்தை குறைத்து கொண்டு, மக்களின் பாதுகாப்பு கருதி முதல்வர் ஸ்டாலின் அடிக்கடி சொல்லும் அந்த இரும்புக்கரத்தை இப்போதாவது பயன்படுத்தி செயல்பட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.