கோவையில் மனைவியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு கணவனும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் சூலூரை அடுத்த பட்டணம்புதூரைச் சேர்ந்தவர்கள் கிருஷ்ணகுமார் – சங்கீதா தம்பதி. இவர்களுக்கு கல்லூரி படிக்கும் இரு மகள்கள் உள்ளனர். இன்று காலை மகள்கள் கல்லூரிக்கு சென்ற பின், கிருஷ்ணகுமார் மனைவி சங்கீதாவை துப்பாக்கியால் சுட்டு கொன்றுவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
கேரள மாநிலம் பாலக்காடு அருகேயுள்ள தனது சொந்த ஊரான வண்டாழி ஈரட்டுகுளம் பகுதிக்கு சென்ற அவர், தனது வீட்டின் முன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.
சம்பவ இடம் வந்த சூலூர் போலீசார், சங்கீதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதேபோல, கிருஷ்ணகுமார் உடலை கைப்பற்றிய பாலக்காடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் கடந்த சில மாதங்களாக மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு, கிருஷ்ணகுமார் சண்டையிட்டு வந்தது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக முழு விவரங்களை பெற அவர்களின் உறவினர்களிடம் போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.