அரியலூர் அருகே நிதி நிறுவன ஊழியர் கொலை செய்து எரிக்கப்பட்ட சம்பவத்தில் கணவன்- மனைவி கைது செய்யப்பட்டுள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பந்தநல்லூர் அருகே உள்ள கஞ்சனூரை சேர்ந்த சிவா, தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் வசூல் பிரதிநிதியாக பணி செய்து வந்தார். இவர் அரியலூர் அருகே கோடாலி கிராமத்தில் செங்கால் ஓடை அருகே பாதி எரிந்த நிலையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.
புகாரின் பேரில் பந்தநல்லூர் காவல் நிலைய போலீசார் நடத்திய விசாரணையில் கோடாலி கிராமத்தை சேர்ந்த மகேஷ் மற்றும் அவரது மனைவி விமலா ஆகியோர் சிவாவை கொலை செய்து எரித்தது தெரிய வந்தது. சிவா பணிபுரிந்த தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்று கார் வாங்கிய மகேஷ் அதனை சரியாக திருப்பி செலுத்தாமல் இருந்து வந்துள்ளார்.
இதனை வசூலிக்கும் பொறுப்பில் இருந்த சிவாவை பணம் தருவதாகக் கூறி தனது வீட்டிற்கு மகேஷ் அழைத்துள்ளார். இதையடுத்து அங்கே சென்ற சிவாவை, மகேஷ், அவரது மனைவி விமலா, உறவினர் விக்னேஷ் மற்றும் 17 வயது சிறுவன் என நான்கு பேரும் கடப்பாறையால் அடித்துக் கொலை செய்துள்ளனர். பிறகு அவரது சடலத்தை செங்கால் ஓடை பகுதிக்கு எடுத்துச் சென்று டீசல் ஊற்றி எரித்துள்ளனர்.
இவையெல்லாம் போலீஸ் விசாரணையில் தெரிய வந்த நிலையில் மகேஷ் மற்றும் விமலாவை கைது செய்த போலீசார் தப்பியோடிய உறவினர்கள் விக்னேஷ் மற்றும் 17 வயது சிறுவனை தேடி வருகின்றனர்.