தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் கள் இறக்க அனுமதி வழங்கப்படும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே கொங்கல்நகரம் பகுதியில் தமிழ்நாடு கள் இயக்கம் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் விழிப்புணர்வு சங்கம் சார்பில் கள் விடுதலை கருத்தரங்கம் நடைபெற்றது.
இந்த நிகழ்வில், தமிழ்நாடு கள் இயக்க கள ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை,
தென்னை, பனை மரங்களில் வரக்கூடிய எல்லா பொருட்களும் உணவு பொருட்களாக பார்க்க வேண்டும் என தெரிவித்தார். தமிழகத்தில் கள் இறக்க அனுமதிக்க வேண்டும் என்பதில் தேசிய ஜனநாயக கூட்டணி தெள்ள தெளிவாக உள்ளது என கூறினார்.
2026ல் தமிழக மக்கள் வாய்ப்பு கொடுக்கும்போது கள் இறக்குவதற்கான அனுமதியை நிச்சயம் பெற்று தருவோம் என கூறினார். மேலும், தேசிய ஜனநாயக கூட்டணியுடன் விவசாய பெருமக்கள் துணை நிற்க வேண்டும் எனவும் அண்ணாமலை கேட்டுக்கொண்டார்.