அயோத்தி ராமர் கோயிலை குண்டு வீசி தகர்க்க பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ செய்த சதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உத்தரபிரதேசத்தின் அயோத்தியில் ராமர் கோயில் புதிதாக கட்டப்பட்டு கடந்தாண்டு ஜனவரியில் திறக்கப்பட்டது. இந்த ராமர் கோயில் பிரபலம் அடைந்துள்ளதால், இங்கு தாக்குதல் நடத்த பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ சதி செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதற்காக அயோத்தி மாவட்டத்தின் பைசாபாத் நகரின் மில்கிபூர் பகுதியைச் சேர்ந்த அப்துல் ரகுமான் அபுபக்கர் என்ற இளைஞரை பாகிஸ்தான் ஐஎஸ்ஐ அமைப்பினர் தேர்வு செய்துள்ளனர். இவருக்கு தீவிரவாத அமைப்பின் நெட்வொர்க் ஒன்றின் மூலம் இரண்டு கையெறி குண்டுகளை பாகிஸ்தான் ஐஎஸ்ஐ அமைப்பினர் வழங்கியுள்ளனர்.
இதுகுறித்த தகவல் அறிந்த குஜராத் காவல்துறையின் தீவிரவாத தடுப்பு பிரிவினர், ஹரியானா சிறப்பு படை போலீஸாருடன் இணைந்து அப்துல் ரகுமானை பரிதாபாத்தில் கைது செய்தனர். அவர் தங்கியிருந்த வீட்டில் இருந்து பென் டிரைவ் ஒன்று மீட்கப்பட்டது.
அதில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ள இடங்களின் வரைபடம், தாக்குதல் நடத்துபவர்களுக்கான அறிவுறுத்தல்கள் அடங்கியிருந்தன. இந்த சதியில் பலர் கைது செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே ரயில்வேயில் பணிபுரிந்து வரும் ராஜஸ்தான் மாநிலம் பிகானேரை சேர்ந்த பவானி சிங் என்பவரை, ஐஎஸ்ஐ உளவு அமைப்பைச் சேர்ந்த பெண் ஒருவர் `ஹனி டிராப்` மூலம் தொடர்பு கொண்டுள்ளார். அவரிடம் மயங்கிய பவானி சிங், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்புக்கு பல்வேறு தகவல்களை கொடுத்துள்ளார். இதுகுறித்து அறிந்த ராஜஸ்தான் போலீசார், பவானி சிங்கை கைது செய்துள்ளனர்.