மத்தியில் காங்கிரஸ் ஆட்சியின் போது தமிழுக்கு ரூ.75 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், “தமிழ் மொழியைப் வளர்க்க என்ன செய்தீர்கள் என்பதை பட்டியலிடுவதற்குப் பதிலாக, அப்படி எதுவும் இல்லை என்பதை அறிந்து, அடுத்த தலைப்புக்குச் செல்ல முதலவர் ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.
தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தைப் பரப்ப பிரதமர் மோடி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்த அவர், பிரதமர் மோடியால் நாடாளுமன்றத்தில் செங்கோல் நிறுவப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ளார்.
மத்தியில் காங்கிரஸ், திமுக கூட்டணி ஆட்சியில் தமிழை விட சமஸ்கிருதம் மொழி வளர்ச்சிக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார். சமஸ்கிருதம் மொழி வளர்ச்சிக்கு ₹675.36 கோடி ரூபாயும், தமிழுக்கு ₹75.05 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டதாக அவர் கூறிள்ளார். அப்போது திமுக என்ன செய்து கொண்டிருந்தது என்றும் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னாள் உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் இந்தியை நாடு தழுவிய அளவில் பிரபலப்படுத்த 170 க்கும் மேற்பட்ட பரிந்துரைகளை சமர்ப்பித்தபோது திமுக என்ன செய்து கொண்டிருந்தது என்றும் அவர் வினவியுள்ளார்.
அப்போது வந்தே மாதரத்தில் திமுகவுக்கு பிரச்சினை இருந்தது என்றும், இன்று வந்தே பாரதத்திலும் அவர்களுக்கு பிரச்சினை உள்ளதாகவும், இது எங்களுக்கு ஆச்சரியமாக இல்லை என்றும் அண்ணாமலை கூறியுள்ளார்.