உத்தரகாண்ட் மாநிலம் முக்வாவில் உள்ள கங்காதேவி கோயிலில் வழிபாடு நடத்திய பிரதமர் மோடி, சுற்றுலா துறையை பன்முகப்படுத்த வேண்டுமென தெரிவித்தார்.
முக்வாவில் உள்ள கங்காதேவி கோயிலுக்கு சென்ற பிரதமர் மோடிக்கு கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்தும், தீபாராதனை காண்பித்தும் வழிபாடு நடத்தினார்.
இதைத்தொடர்ந்து உத்தரகாண்டிற்கு வருகை தந்த பிரதமர் மோடிக்கு பழங்குடி மக்கள், பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு அளித்தனர். பாரம்பரிய உடை அணிந்துகொண்ட மக்கள், நடனமாடி பிரதமரை வரவேற்றனர்.
இதையடுத்து, உத்தரகாசியில் மலையேற்றம் மற்றும் இருசக்கர வாகன பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்த பிரதமர் மோடி, அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், புனித யாத்திரைக்கு ஏற்ற இடமாக உத்தரகாண்ட் விளங்குவதாக தெரிவித்தார். மேலும், குளிர்காலத்தின் போது மலையேற்றம், பனிச்சறுக்கு போன்றவை மக்களை மெய்சிலிர்க்க வைப்பதாகவும் சுற்றுலா துறையை பன்முகப்படுத்த வேண்டுமெனவும் கூறினார்.