மும்மொழி கொள்கைக்கு ஆதரவான தமிழக பாஜகவின் கையெழுத்து இயக்கத்தை கண்டு முதலமைச்சர் ஸ்டாலின் பதற்றம் அடைந்துள்ளார் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், புதியகல்வி என்ற இணைய தள பக்கத்தின் வழியாக நடத்தப்பட்டு வரும் கையெழுத்து இயக்கம் 36 மணி நேரத்திற்குள் 2 லட்சத்திற்கும் அதிகமான ஆதரவை பெற்றுள்ளதாக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்
மேலும் பாஜகவினர் களத்திற்கு சென்று மேற்கொள்ளும் கையெழுத்து இயக்கமானது தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து பெரும் வரவேற்பைப் பெற்று வருவதாகவும் அண்ணாமலை பதிவிட்டுள்ளார்
பாஜகவினரின் கையெழுத்து இயக்கத்தை கண்டு முதலமைச்சர் ஸ்டாலின் பதற்றம் அடைந்துள்ளது வெளிப்படையாக தெரிகிறது எனவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பாஜகவின் கையெழுத்து இயக்கத்திற்கு எதிரான உங்கள் கூச்சல்கள் எந்த பயனும் அளிக்காது என தெரிவித்துள்ள அண்ணாமலை, உங்கள் போலி இந்தி திணிப்பு நாடகம் ஏற்கனவே அம்பலமாகிவிட்டது எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் இந்தி திணிப்பு என்ற காகித வாள் வீசுவதை நிறுத்த வேண்டும் எனவும் அண்ணாமலை தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.