நாட்டிற்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்ட ஒவ்வொரு இளம் ராணுவ வீரர்களுக்குப் பின்னாலும் ஒரு பெருங்கதை ஒளிந்து கொண்டுள்ளது. அதுதொடர்பான ஒரு செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம்.
சென்னை தாம்பரத்தில் உள்ள இந்திய ராணுவ அதிகாரிகளின் பயிற்சி மையத்தில் புதிதாக பயிற்சி பெற்ற 169 பேர் லெப்டினன்ட் அதிகாரிகளாக பதவியேற்றுக் கொண்டுள்ளனர். 11 மாத கால கடும் பயிற்சிக்கு பிறகு பதவியேற்ற அவர்கள், இன்னும் ஒருசில வாரங்களில் தங்களின் பணிக்கு திரும்ப உள்ளனர். தாய்நாட்டின் பாதுகாப்பிற்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்ட புதிய ராணுவ அதிகாரிகள் ஒவ்வொருவரின் பின்னணியும் பல வலிகளையும், வேதனைகளையும் சுமந்துள்ளது. அந்த வகையில் அசாம் மாநிலத்தை சேர்ந்த லெப்டினன்ட் வேத் விஜயின் வாழ்க்கை இளைஞர்களுக்கு உந்துசக்தியாக அமைந்துள்ளது.
அசாம் மாநிலம் ஜோர்ஹட்டை சேர்ந்தவர் வேத் விஜய். டெல்லியில் உணவு டெலிவரி ஊழியராக பணியாற்றியது முதல், இந்தியாவின் 22 முக்கிய நகரங்களுக்கு சென்று புகைப்படம் எடுத்த அனுபவம் வரை பல சுவாரஸ்யமான மற்றும் கடினமான நாட்களை கடந்து வந்துள்ளார்.
கல்லூரி பயிலும் போது இன்டர்ன்ஷிப் பணிகளுக்காக பல நகரங்களுக்கு சென்ற விஜய்க்கு படிப்பை முடித்த உடனே இந்திய ராணுவ அகாடமியில் சேர வாய்ப்பு கிடைத்தது. பெரும் ஆர்வத்தில் பயிற்சியை தொடங்கிய விஜய்-க்கு அவரது குடும்ப சூழல் கைகொடுக்கவில்லை. அதனால் அவர் பயிற்சி அகாடமியில் இருந்து பாதியில் வெளியேறி மீண்டும் பணிக்கு சென்றார்.
பாக்கெட்டில் இருந்த 2 ஆயிரம் ரூபாயை மட்டும் வைத்துக் கொண்டு டெல்லி வந்த விஜய், பகல் நேரங்களில் டீ கடையிலும், இரவு நேரங்களில் உணவு டெலிவரி செய்யும் பணியையும் செய்யத் தொடங்கினார். இந்த சூழலில் விஜய்க்கு புகைப்பட கலைஞர் வேலை கிடைத்தது. இந்தியாவின் 22 நகரங்களை சுற்றி வந்த அவர், தாய்நாட்டின் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் கூகிள், சாம்சங் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களுக்கு புகைப்படம் எடுத்துக் கொடுத்தார்.
ஆனால், தாய்நாட்டிற்கு சேவையாற்ற வேண்டும் என்ற அவரது வேட்கை தீரவே இல்லை. அதனால், மீண்டும் இந்திய ராணுவத்தில் நுழைய திட்டமிட்டார் விஜய். ஒருங்கிணைந்த ராணுவ சேவைக்கான தேர்வை எழுதிய அவர், அதிகாரிகளின் தேர்வுக்கான நேர்முகத் தேர்விலும் தேர்ச்சி பெற்றார்.
பின்னர் சென்னை தாம்பரத்தில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் வாய்ப்பு கிடைத்ததும் தனது வாழ்வின் புதிய அத்தியாயத்தை எழுதி இருக்கிறார் விஜய். குடும்ப வறுமை காலை பின்னோக்கி இழுத்தாலும் தாய்நாட்டுக்குச் சேவையாற்ற வேண்டும் என்ற எண்ணம் அவரை மனம் தளரவிடவில்லை. அதன் பலனாக இன்று லெப்டினன்ட் அதிகாரியாக மிளிர்ந்து கொண்டிருக்கிறார் வேத் விஜய்.
வேத் விஜய் போன்று பலரும் வலிமிகுந்த பின்னணியுடன் தங்களின் வாழ்க்கையை இந்திய ராணுவத்திற்காக அர்ப்பணிக்க வந்துள்ளனர். உழைப்பை மட்டுமே மூலதனமாகக் கொண்டு நம்பிக்கை மற்றும் பொறுமையுடன் வாழ்க்கையின் பல அற்புத தருணங்களை எதிர்பார்த்து காத்திருக்கும் பலருக்கும் வேத் விஜயின் வாழ்க்கை ஒரு உந்துசக்தி.