புதிய கல்விக் கொள்கையை ஏற்காததால் தமிழகத்தில் தமிழ் மொழி கல்வி சரிவை சந்தித்து வருவதாக மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் குற்றஞ்சாட்டியுள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் உரையாற்றிய மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், தமிழ் தான் உலகின் மூத்த மொழி என்பதை மத்திய அரசு பல இடங்களில் தெளிவுபடுத்தி உள்ளதாக தெரிவித்தார்.
பிரதமர் மோடி அரசு தமிழுக்கும், தமிழக மக்களுக்கும் எதிரானவர் அல்ல என கூறிய தர்மேந்திர பிரதான், பாரம்பரியத்தின்படி தனது தாய், தமிழகத்தை சேர்ந்தவர் என உருக்கமாக தெரிவித்தார்.
தமிழக எம்பிக்கள் குறித்து தவறாக பேசியிருந்தால் 100 முறை மன்னிப்பு கேட்க தயார் என்றும் தர்மேந்திர பிரதான் கூறினார்.
புதிய கல்விக் கொள்கையை ஏற்காததால் தமிழகத்தில் தமிழ் மொழி கல்வி சரிவை சந்தித்து வருவதாக குற்றஞ்சாட்டிய அவர், தமிழக அரசு பள்ளிகளில் தமிழ் மொழி கல்வி முக்கியத்துவத்தை இழந்து வருவதாகவும் வேதனை தெரிவித்தார்.
தமிழகத்தில் உள்ள ஆயிரத்து 460 சிபிஎஸ்இ பள்ளிகளில், ஆயிரத்து 411 பள்ளிகளில் தமிழ் கற்பிக்கப்படுவதாக தெரிவித்த அவர், இந்தி, சமஸ்கிருதம் மட்டுமே மூன்றாவது மொழியாக இருக்க வேண்டும் என ஒருபோதும் மத்திய அரசு கூறியதில்லை என்றும், புதிய கல்விக் கொள்கையில் எந்த மொழியும் திணிக்கப்படவில்லை எனவும் விளக்கமளித்தார்.
தேசிய கல்விக் கொள்கையின்படி மாநில தாய்மொழி தான் பயிற்று மொழியாக உள்ளது எனக் கூறிய அவர், காலனித்துவ மொழியான ஆங்கிலம் ஆதிக்கம் பெற்று வருவதாகவும் வேதனை தெரிவித்தார்.
மேலும், தனி உலகத்தில் வாழும் திமுகவினர் நாடாளுமன்றத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென தனக்கு பாடம் எடுக்க வேண்டாம் என தெரிவித்த தர்மேந்திர பிரதான், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை தமிழக சட்டமன்றத்தில் எவ்வாறு நடத்தினீர்கள் என்பதை நாடறியும் என கூறியுள்ளார்.