மும்மொழிக்கு கொள்கை ஆதரவாக கோவையில் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் கைது செய்யப்பட்டதற்கு அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், தமிழகத்தில், ஏழை, எளிய மாணவர்கள், அரசுப் பள்ளியில் மும்மொழிகள் பயிலும் வாய்ப்பையும் வழங்கும் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தக் கோரிப் போராட்டம் நடத்திய கோயம்புத்தூர் தெற்கு மாவட்டத் தலைவர் சந்திரசேகர், முன்னாள் மாவட்டத் தலைவர் வசந்த் உள்ளிட்ட நிர்வாகிகளைக் காவல்துறை கைது செய்திருப்பதை வன்மையாகக் கண்டிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
திமுகவினர் நடத்தும் பொய்யான போராட்டங்களுக்குப் பாதுகாப்பு கொடுப்பது, பாஜகவின் போராட்டங்களைத் தடுப்பது என, முற்றிலும் ஜனநாயக விரோதமாக நடந்து கொள்கிறது திமுக அரசின் காவல்துறை என்றும் அவர் கூறியுள்ளார்.
சமக்கல்வி கையெழுத்து இயக்கத்திற்குப் பொதுமக்களிடையே கிடைத்து வரும் ஆதரவு கண்டு, முதலமைச்சர் ஸ்டாலின் பயந்து போயிருக்கிறார் என்பதுதான், இது போன்ற அதிகார அடக்குமுறைகளுக்குக் காரணம் என்றும், நீங்கள் எப்படி முயற்சித்தாலும், தமிழகத்தில் மும்மொழிக் கல்வி நிச்சயம் வரும் முதலமைச்சர் அவர்களே என்றும் அண்ணாமலை கூறியுள்ளார்.