தென்காசி அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து இயக்கப்படும் பேருந்துகள் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளதாகவும், பயணிகளின் நலனில் அக்கறை கொள்ளாமல் துறை சார்ந்த அதிகாரிகள் அலட்சியத்துடன் செயல்படுவதாகவும் பயணிகள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
தென்காசி அரசு போக்குவரத்து பணிமனையிலிருந்து நாள்தோறும் பல்வேறு பகுதிகளுக்கு அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆலங்குளத்தில் இருந்து நெல்லையில் உள்ள அழகிய பாண்டியபுரம் வழித்தடத்தில் இயக்கப்படும் பேருந்துகள் மிகவும் சேதமடைந்த நிலையில் உள்ளதாக பயணிகள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
இந்த வழித்தடத்தில் செல்லும் அரசு பேருந்தின் 4ஆவது சீட்டின் அருகே பெரிய துவாரம் உள்ளதாகவும், அதனை தகரம் வைத்து அடைத்து பேருந்தை இயக்குவதாகவும் பயணிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
பேருந்தில் பயணிப்பவர்கள் தவறுதலாக துவாரம் இருக்கும் பகுதியில் கால் வைத்தால் கீழே விழுந்து அசம்பாவிதம் நேரிட வாய்ப்புள்ளதாகவும் அச்சம் தெரிவித்துள்ளனர். மேலும், பேருந்தின் மேற்கூரையும் சேதமடைந்துள்ளதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.