மாசாணி அம்மன் கோயில் நிதியிலிருந்து ஊட்டியில் ரிசார்ட் கட்டப்படும் என்ற அறிவிப்பை திரும்ப பெறுவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கோவையில் உள்ள மாசாணி அம்மன் கோயிலுக்கு பக்தர்கள் செலுத்திய காணிக்கை தொகை 100 கோடி ரூபாய் வங்கியில் வைப்புத் தொகையாக வைக்கப்பட்டுள்ளது.
இந்த பணத்தில் இருந்து ஒரு கோடியே 40 லட்சம் ரூபாய் எடுத்து ஊட்டியில் ரிசார்ட் கட்ட முடிவு செய்துள்ளதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இந்த அரசாணையை ரத்து செய்யக்கோரி பார்த்தசாரதி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி கே.ஆர்.ஶ்ரீராம், நீதிபதி முகமது ஷஃபிக் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில், கோயில் நிதியை கோயில் நலன் சார்ந்த பணிகளுக்கு மட்டுமே செலவிட வேண்டும் என்றும், பல்வேறு வழக்குகளில் பிறப்பித்துள்ள உத்தரவை மீறும் வகையில் தமிழக அரசின் அரசாணை உள்ளதாகவும் வாதிடப்பட்டது.
அரசு தரப்பில், ரிசார்ட் கட்டும் அரசாணையை திரும்ப பெற்றுக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து வழக்கை முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.