கர்நாடக மாநிலம் மங்களூருவில் முன்பகை காரணமாக அண்டை வீட்டாரை, காரை ஏற்றிக் கொலை செய்ய முயற்சித்த நபரை போலீசார் கைது செய்தனர்.
மங்களூருவில் உள்ள கிரோடியன் சாலையில் வசித்து வருபவர் முரளி பிரசாத். இவருக்கும், அண்டை வீட்டுக்காரரன சதீஷ்குமார் குடும்பத்தினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் இரு குடும்பத்தினருக்கும் இடையே வெகுநாட்களாக முன்பகை இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் கடந்த 13-ம் தேதி வழக்கம் போல் முரளி பிரசாத் வேலைக்கு சென்று கொண்டிருந்தபோது, மறைந்திருந்த சதீஷ்குமார் தனது காரைக் கொண்டு அவரின் மீது மோதி தரதரவென இழுத்துச் சென்றார்.
அப்போது, சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்த பெண் மீதும் கார் மோதியதால் அப்பெண் பலத்த காயமடைந்தார். இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சதீஷ்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.