சனாதன தர்மம் தோன்றிய மிக பழமையான தேசம் பாரத தேசமாகும். தெய்வீகம் மணக்கும் பாரதநாடு ஒரு புண்ணிய பூமி எனப் போற்றப்படுகிறது. சிறப்பாக, சிவபெருமான் உறையும் திருக்கயிலையும், ஸ்ரீமன் நாராயணன் உறையும் வைகுந்தமும் பாரத நாட்டில் தான் உள்ளன. இந்நிலையில், மகா விஷ்ணுவின் கருணை நிறைந்திருக்கும் 6 முக்கிய திருத்தலங்களைப் பற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
பத்ரிநாத், துவாரகா, பூரி, ராமேஸ்வரம், ஹரித்வார் மற்றும் மதுரா ஆகிய ஆறு திருத்தலங்களும் மிக முக்கியமானவை ஆகும். பத்ரிநாத் உத்தரகாண்டிலும், துவாரகா குஜராத்திலும், பூரி ஒடிசாவிலும், ராமேஸ்வரம் தமிழ்நாட்டிலும், ஹரித்வார் உத்தரகாண்டிலும், மதுரா உத்தரபிரதேசத்திலும் அமைந்துள்ளன.
இந்த 6 திருக்கோயில்களில், பத்ரிநாத் மற்றும் ராமேஸ்வரம் திருக்கோயில்கள் ஒரே தீர்க்கரேகையில் அமைந்துள்ளன. துவாரகை மற்றும் பூரி ஆகிய திருக்கோயில்கள் ஒரே அட்சரேகையில் அமைந்துள்ளன. மேலும், பத்ரிநாத், துவாரகை , பூரி மற்றும் ராமேஸ்வரம் ஆகியவை இந்தியாவின் வடக்கு, மேற்கு, கிழக்கு மற்றும் தெற்கு புள்ளிகளில் அமைந்துள்ளன. எனவே இந்த திருக்கோயில்கள் ஒரு சரியான சதுரவடிவத்தை உருவாக்குகின்றன.
இந்த தலங்களில், காக்கும் தெய்வமான மஹாவிஷ்ணு திருவருள் நிறைந்திருக்கிறது என்று கூறப்படுகிறது. எனவே, இந்த கோயில்களுக்குச் சென்று வணங்கினால் முக்தி நிச்சயம் என்று நம்பப்படுகிறது.
108 வைணவ திவ்ய தேசங்களில் பத்ரிநாத் பத்ரிநாராயணர் கோயில் ஒன்றாகும். உத்தரகாண்ட்டில் பத்ரிநாத் பத்ரிநாராயணர் கோயில் அலக்நந்தா ஆற்றங்கரையில் இக்கோயில் அமைந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 10,248 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இமயமலையின் குளிர் காரணமாக, வருடத்தில் 6 மாதங்கள் மட்டுமே திறக்கப்பட்டிருக்கும்.
பெரியாழ்வார், திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ள இந்த திருத்தலத்தில்,ஸ்ரீமன் நாராயணன் பல்லாயிரம் ஆண்டுகள் கடும் குளிரில் ஈசனை நோக்கி தவம் செய்ததாக தல வரலாறு கூறுகிறது. எனவே மகா லட்சுமி, பத்ரிமரமாக இத்தலத்தில் தங்கி விட்டதாக கூறப்படுகிறது.
இந்தியாவின் முக்தி தரும் ஏழு திருத்தலங்களில் துவாரகையும் ஒன்றாகும். இது தங்க நகரம் என்றும் அழைக்கப்படுகிறது. இங்குள்ள துவாரகாதீசர் கோயில் 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். குஜராத்தின் துவாரகையில் ஓடும் கோமதி நதிக்கரையில் இத்தலம் அமைந்துள்ளது.
பெரியாழ்வார், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், திருமழிசையாழ்வார், ஆண்டாள் ஆகிய 5 ஆழ்வார்களால் மங்களாசனம் செய்யப் பெற்றதாகும். இக்கோயிலில், ஒரு நாளைக்கு 17 முறை நைவேத்தியம் தந்து கொடுத்து மணிக்கொருதரம் ஸ்ரீ கிருஷ்ணருக்கு வஸ்திரம் மாற்றுகிறார்கள்.
ஒடிசாவில் பூரி ஜெகந்நாதர் தனது சகோதரர் பலராமர், சகோதரி சுபத்ரா தேவியுடன் அருள்பாலிக்கிறார். தினமும் காலையில் எழுந்து ராமேஸ்வரம் சென்று விட்டு, மதிய உணவுக்கு மீண்டும் இந்த பூரி ஜெகந்நாதர் ஆலயத்துக்கு மகா விஷ்ணு, வந்துவிடுவதாக கூறப்படுகிறது. அதனால், நாள்தோறும் இந்த கோவிலில் மகாவிஷ்ணுவுக்கு விருந்து அளிக்கப்படுகிறது.
இராமேஸ்வரம் திருக்கோயில், பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களில் ஒன்றாகும். இராவணனை வதம் செய்ததால் ஏற்பட்ட பிரம்மஹத்தி பாவத்தைப் போக்க, இத்திருத்தலத்துக்கு சீதை, இலட்சுமணனுடன் வந்து, சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து ஸ்ரீ ராமர் வழிபட்டார் என்று புராணங்கள் கூறுகின்றன.
உத்தரகண்டில் கங்கை நதியின் கரையில் அமைந்துள்ள ஹரித்வார் பூமிக்கு கங்கை இறங்கிய இடமாகும்.
புனித மலைத்தொடரான ஹர் கி பௌரி, மலையில் உள்ள பிரம்ம குண்டத்தில் மகா விஷ்ணுவின் திருப்பாதம் பதிந்திருப்பதாக கூறப்படுகிறது. தினந்தோறும் மாலையில், இங்கே நடக்கும் கங்கா ஆரத்தியை தரிசனம் செய்வது ஆன்ம பலத்தைத் தரும் என்று கூறப்படுகிறது. மேலும், ஹரித்வாரில் கங்கையில் நீராடுவது பாவங்களைக் கழுவி ஆன்மாவைத் தூய்மைப்படுத்துகிறது.
ஸ்ரீ கிருஷ்ணரின் அவதார தலமான மதுரா உத்தர பிரதேசத்தில் யமுனை நதிக்கரையில் அமைந்துள்ளது. இது தனது குழந்தைப் பருவத்தில், மற்றும் இளமைப் பருவத்தில் ஸ்ரீ கிருஷ்ணர் இங்கே தான் திரு விளையாடல்கள் புரிந்தார்.
மதுராவில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணர் கோயில் கிட்டத்தட்ட 5000 ஆண்டுகளுக்கு முன் ஸ்ரீ கிருஷ்ணரின் கொள்ளுப் பேரனான வஜ்ரநாபரால் கட்டப்பட்டதாகும்.
இந்த முக்கியமான ஆறு திருக்கோயில்களும் வெறும் வழிபாட்டு இடங்கள் மட்டுமல்ல. இந்திய பாரம்பரியத்தின் அடையாளங்களாகும். மகா விஷ்ணுவின் தெய்வீக ஆற்றல் உள்ள தெய்வீக இடங்களாகும். இந்த கோயில்களுக்கு வந்தால், மகாவிஷ்ணுவின் ஆற்றலை உணர முடிகிறது என்றும், வாழ்க்கை பாதுகாப்பு கிடைக்கிறது என்றும் பக்தர்கள் கூறுகிறார்கள். மாறிவரும் உலகில் கூட, தெய்வப் பக்தி உள்ளது என்பதை இந்த திருத்தலங்கள் உணர்த்துகின்றன.