டாஸ்மாக் ஊழலைக் கண்டித்து பாஜக சார்பில் நடைபெறும் போராட்டத்தில் கலந்து கொள்ளவிருந்த பாஜக மூத்த தலைவர்களைத் தடுத்து நிறுத்தி காவல்துறை கைது செய்தனர்.
தமிழகத்தில் அரசு மதுக்கடைகளை நடத்தும் டாஸ்மாக் நிறுவனத்திலும், மது ஆலைகளிலும் நடத்தப்பட்ட சோதனைகளில் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்தது. இந்த விவகாரத்தைக் கண்டித்து சென்னையில் மாபெரும் முற்றுகை போராட்டம் நடைபெறும் எனத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார்.
இந்த சூழலில், போராட்டத்தில் பங்கேற்ற இருந்த பாஜக மூத்த தலைவர்களை காவல்துறை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். சென்னை சாலிகிராமம் வீட்டில் இருந்து புறப்பட்ட பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜனை காவல்துறை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். தொடர்ந்து, காவல் வாகனத்தில் அவரை அழைத்துச் சென்றபோது பாஜக தொண்டர்கள் வழிமறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.
இதேபோன்று, சென்னை தி.நகர் இல்லத்திலிருந்து எழும்பூர் புறப்பட்ட பாஜக மாநிலச் செயலாளர் வினோஜ் பி.செல்வத்தை காவல்துறை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். மேலும், அவரை தனியார் மண்டபத்திற்கு அழைத்துச் சென்று காவல்துறை தங்க வைத்துள்ளனர்.
இதற்கிடையே சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலக முற்றுகை போராட்டத்தில் பங்கேற்க குவிந்த பாஜக தொண்டர்களை காவல்துறை கைது செய்தனர். மேலும், அவர்களை வாகனங்களை அழைத்துச் சென்றதால் அந்த பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது.