நிர்மல் கிருஷ்ணா நிதி நிறுவனத்தின் 600 கோடி ரூபாய் மோசடி வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றம் செய்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம், தமிழக – கேரள எல்லையையொட்டி பளுகல் பகுதியில் செயல்பட்டு வந்த நிர்மல் கிருஷ்ணா நிதி நிறுவனத்தில் 600 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடந்தது. 2017ஆம் ஆண்டில் நடந்த மோசடியில் தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் ஈடுபட்டது தெரியவந்தது.
இது சம்பந்தமாக அரசு சார்பில் சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, நிர்மல் கிருஷ்ணா நிதி நிறுவனத்தின் சொத்துக்களை பறிமுதல் செய்ய உத்தரவிட்டது.
அரசியல் மற்றும் அதிகாரம் காரணமாக வழக்கின் மீதான நடவடிக்கைகளின் வேகம் குறைந்ததால், கேரள முதலமைச்சரிடம் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது. இந்நிலையில், நிர்மல் கிருஷ்ணா நிதி நிறுவனத்தின் மோசடி வழக்கை சிபிஐக்கு மாற்றம் செய்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.