ரஷ்யாவிடமிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கச்சா எண்ணெய்யைச் சுத்திகரித்து, அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்ததன் மூலம் ரிலையன்ஸ் நிறுவனம், சுமார் 6,850 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது. இது சாத்தியமானது எப்படி? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.
2022ம் ஆண்டு,தொடக்கத்தில், ரஷ்யா-உக்ரைன் போர் தொடங்கியது. சர்வதேச சட்டங்களை மீறியதாகச் சொல்லி, ரஷ்யாவுக்கு எதிராக,உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ நாடுகள் ஆதரவு தெரிவித்தன.
மேலும் உக்ரைனுக்கு ஆயுத மற்றும் நிதி உதவிகளை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் செய்தன. ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப் பட்டன.
எனினும், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய்யை வாங்குவதையோ,பயன்படுத்துவதையோ அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தடை செய்யவில்லை. மேலும்,ரஷ்யக் கச்சா எண்ணெய்யிலிருந்து பெறப்படும், பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட எரிபொருளை ஏற்றுமதி செய்வதற்கும் ,இறக்குமதி செய்வதற்கும் தடை விதிக்கப்படவில்லை.
இந்த பொருளாதாரத் தடையால், ரஷ்யா தன் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய்யை, பிற நாடுகளுக்குக் குறைந்த விலைக்கு விற்க முன்வந்தது. அதனால், இந்தியா ரஷ்யாவிடமிருந்து பெருமளவில் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்தது. பின்னர் அவற்றைச் சுத்திகரித்துப் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது.
இந்தியா, கச்சா எண்ணெய்யை ரஷ்யாவிடம் இருந்து வாங்காமலிருந்தால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்யின் விலை ஒரு பீப்பாய் 200 டாலரைத் தாண்டி இருக்கும். இதனால், உலக பொருளாதாரத்தில் பெரும் தாக்கம் ஏற்பட்டிருக்கும். இந்தியாவின் இந்த முடிவால்தான் சர்வதேச கச்சா எண்ணெய் விலையின் ஏற்றம் தடுக்கப்பட்டுள்ளது.
இந்தச் சூழலில்தான், கடந்த டிசம்பர் மாதம், ரிலையன்ஸ் நிறுவனம் ரஷ்யாவிடம் இருந்து மிகப்பெரிய கச்சா எண்ணெய் ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளது. ரஷ்ய அரசுக்குச் சொந்தமான Rosneft நிறுவனம், ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஒருநாளைக்கு 5 லட்சம் பீப்பாய்கள் கச்சா எண்ணெய் வழங்க ஒப்பந்தம் செய்துள்ளது. இந்தியா- ரஷ்யாவுக்கு இடையேயான இதுவரை இல்லாத மிகப்பெரிய எரிசக்தி ஒப்பந்தமாகும்.
ஆண்டுதோறும் 1.1 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான இந்த ஒப்பந்தம், பொருளாதாரத் தடைகளை எதிர்கொண்டுள்ள ரஷ்யாவுக்கு நிலையான வருவாயை வழங்குகிறது. அமெரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் இந்தியா போன்ற நாடுகளிலிருந்து ரஷ்ய கச்சா எண்ணெய்யைச் சுத்திகரிப்பு செய்து அதன் மூலம் பெறும் எரிபொருளை இறக்குமதி செய்து வருகிறது.
Nayara Energy நிறுவனம், ஆண்டுக்கு 20 மில்லியன் டன் சுத்திகரிப்பு ஆலையைக் குஜராத்தின் Vadinar பகுதியில்,வைத்துள்ளது. கடந்த ஓராண்டில் மட்டும் 1740 கோடி ரூபாய் மதிப்புள்ள எரிபொருளை இந்நிறுவனம் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. இதில் 1173 கோடி மதிப்பிலான ரஷ்ய கச்சா எண்ணெய் சுத்திகரிக்கப்பட்டதாகக் கூறப் பட்டுள்ளது.
மங்களூரு சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் இருந்து, 397 கோடி ரூபாய் மதிப்பிலான எரிபொருள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப் பட்டுள்ளது. இதில்,208 கோடி ரூபாய் மதிப்பிலான ரஷ்ய கச்சா எண்ணெய் சுத்திகரிக்கப் பட்டதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.
கூடுதலாகத் துருக்கியின் மூன்று சுத்திகரிப்பு ஆலைகளில் இருந்து மொத்தம் 5,828 கோடி மதிப்பிலான எரிபொருள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இதில் 5,155 கோடி மதிப்பிலான ரஷ்ய கச்சா எண்ணெய்யில் இருந்து சுத்திகரிப்பு செய்யப்பட்டதாகக் கூறப் பட்டுள்ளது.
கடந்த ஆண்டு,இந்தியா மற்றும் துருக்கியில் உள்ள ஆறு சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து சுமார் 26,489 கோடி ரூபாய் மதிப்பிலான சுத்திகரிக்கப் பட்ட எண்ணெய்யை அமெரிக்கா இறக்குமதி செய்துள்ளது. இதில் 12,298 கோடி ரூபாய் மதிப்பிலான ரஷ்யாவின் கச்சா எண்ணெய் சுத்திகரிக்கப்பட்டதாக எரிசக்தி மற்றும் சுத்தமான காற்று ஆராய்ச்சி மையத்தின் (CREA ) அறிக்கை தெரிவித்துள்ளது.
ரிலையன்ஸிடமிருந்து எரிபொருட்களை அமெரிக்கா இறக்குமதி செய்துள்ளது. அமெரிக்காவுக்கு எரிபொருள் ஏற்றுமதி செய்ததன் மூலம் ரிலையன்ஸ் நிறுவனம் சுமார் 6,850 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளதாக ஐரோப்பியச் சிந்தனைக் குழுவின் அறிக்கை தெரிவித்துள்ளது.