கோவை சங்கமேஸ்வரர் கோயிலில் தைப்பூசம், சித்திரைத் திருவிழா தேரோட்டத்தை இனி ஆண்டுதோறும் நடத்த வேண்டும் எனச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை உக்கடத்தில் உள்ள கோட்டைமேடு சங்கமேஷ்வரர் கோயிலில் கடந்த 28 ஆண்டுகளாகத் தேர்த் திருவிழா நடத்தப்படாமல் இருந்தது.
தேரோட்டம் நடத்த அறநிலையத்துறைக்கு உத்தரவிடக்கோரி, இந்து கோயில்கள் பாதுகாப்பு இயக்கத்தின் கோவை மாவட்ட பொதுச்செயலாளர் முத்து கணேசன், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கானது தலைமை நீதிபதி கே.ஆர் ஸ்ரீராம், முகமது சபீக் அமர்வில் விசாரணைக்கு வந்ததையடுத்து, உக்கடம் பதற்றம் நிறைந்த பகுதி என்பதால் நிபந்தனைகளுடன் தேரோட்டம் நடத்தப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதைக் கேட்ட நீதிபதிகள், சங்கமேஸ்வரர் கோயில் தேரோட்டத்தை இனி ஆண்டுதோறும் தடையின்றி நடத்த வேண்டும் என உத்தரவிட்டனர்.
மேலும், மே 10-ம் தேதி நடத்தப்பட உள்ள தேரோட்டத்திற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் காவல்துறை மேற்கொள்ள வேண்டுமெனவும் ஆணை பிறப்பித்தனர்.