கர்நாடகா சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்ட பாஜக எம்.எல்.ஏக்கள் 18 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
கர்நாடகாவில் முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநில பட்ஜெட் கடந்த 7ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், இன்றைய கூட்டத்தொடரின்போது ஹனி டிராப் மூலம் அரசியல் தலைவர்களை சிக்க வைக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக பாஜக எம்எல்ஏ சுனில் குமார் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து பாஜக எம்எல்ஏக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
இந்த விவகாரம் தொடர்பாக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்றும், இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் எனவும் முதல்வர் சித்தராமையா உறுதியளித்தார். இதனை ஏற்க மறுத்த பாஜக எம்எல்ஏக்கள், சட்டப்பேரவையில் கடும் அமளியில் ஈடுபட்டனர். மேலும் சபாநாயகரை நோக்கி காகிதங்களைக் கிழித்து வீசியும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
இந்நிலையில், கர்நாடகா சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்ட பாஜக எம்.எல்.ஏக்கள் 18 பேரை சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் காதர் உத்தரவிட்டுள்ளார். மேலும், 6 மாதங்களுக்கு அவைக்கு வரத் தடை விதித்தும் ஆணையிட்டார். இதையடுத்து அவைக் காவலர்களால் பாஜக எம்.எல்.ஏக்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர்.