மகாராணி அப்பாக்காவின் 500-ஆவது பிறந்த நாளையொட்டி அவரது நினைவை போற்றுவோம் என ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோசபாலே தெரிவித்துள்ளார்.
பெங்களூரில் நடைபெற்ற அகில பாரதிய பிரதிநிதி சபாவில் பேசிய அவர், கர்நாடகத்தின் கடலோர பகுதிகளைக் கட்டிக்காத்த உல்லால் மகாராணி அப்பாக்கா, பன்முகத்திறமையுடன் செயல்பட்டதாக புகழாரம் சூட்டினார்.
மகாராணி அப்பாக்காவின் 500-ஆவது பிறந்த நாளில் அவரது வீரத்துக்கும் தியாகத்துக்கும் ஆர்எஸ்எஸ் தலைவணங்குவதாக கூறிய தத்தாத்ரேய ஹோசபாலே,தனது ஆட்சிக்காலத்தின்போது போர்த்துகீசியர்களுக்கு அவர் சிம்மசொப்பனமாக விளங்கியதாகவும், பயமறியா குணத்தால் அபயராணி என்றும் அவர் அழைக்கப்பட்டதாக குறிப்பிட்டார்.
மகாராணி அப்பாக்காவை போற்றும் வகையில் 2003ல் தபால் தலையை வெளியிட்டு மத்திய அரசு கெளரவித்ததை சுட்டிக்காட்டிய தத்தாத்ரேய ஹோசபாலே, 2009-இல் ரோந்து கப்பல் ஒன்றுக்கு அவரது பெயர் சூட்டப்பட்டதையும் நினைவுகூர்ந்தார்.
மகாராணி அப்பாக்காவின் வாழ்க்கை வரலாற்றிலிருந்து ஒவ்வொருவரும் உத்வேகம் பெற வேண்டும் என்றும், தேசத்தைக் கட்டமைப்பதில் அவரது பங்களிப்பு இன்றியமையாதது என்றும் தத்தாத்ரேய ஹோசபாலே புகழாரம் சூட்டினார்.