தமிழகத்தில் நிலவும் தேர்தல் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் மாநில தலைமை தேர்தல் அதிகாரி தலைமையில் நடைபெற்றது.
அரசியல் கட்சிகளிடம் ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை பெற்று சட்ட விதிகளுக்கு உட்பட்டு, தேர்தல் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வுகாண வேண்டும் என அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியிருந்தது.
அதனடிப்படையில் சென்னை தலைமை செயலகத்தில் மாநில தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்னாயக் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், தேமுதிக உள்ளிட்ட 12 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
அண்மையில் இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட விசிக மற்றும் நாதக கட்சிகளின் பிரதிநிதிகளும் முதல் முறையாக கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் தமிழகத்தில் நிலவும் தேர்தல் தொடர்பான பிரச்சனைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
அனைத்து கட்சி கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில துணை தலைவர் கரு.நாகராஜன், வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் மற்றும் சேர்ப்பு செய்த பட்டியலை, அரசியல் கட்சிகளிடம் வழங்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டுள்ளதாக தெரிவித்தார்.