தேர்தல் நெருங்கும் போதுதான் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும், சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்ப கூட்டணி என்பது மாறும் எனவும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக பிரச்சினைகள் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் பேசியதாகவும், தமிழகத்திற்கான நிதியை உடனடியாக விடுவிக்க கோரிக்கை விடுத்ததாகவும் கூறினார்.
மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு துணை நிற்க கூடாது என்றும், கோதாவரி – காவிரி திட்டத்தை விரைவுப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்ததாகவும் கூறினார்.
டாஸ்மாக் ஊழல் குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியதாகவும், தமிழக மக்களின் பிரச்னைகளுக்காக தான் உள்துறை அமைச்சரை சந்தித்ததாகவும் தெரிவித்தார்.
“உள்துறை அமைச்சர் உடனான சந்திப்பில் தமிழக திட்டங்கள், பிரச்னைகள் குறித்து விளக்கினோம் என்றும், கூட்டணி என்பது வேறு; கொள்கை என்பது வேறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
சட்டமன்ற தேர்தலுக்கு ஓராண்டு உள்ளதாகவும், தேர்தல் நெருங்கும் போது தான் கூட்டணி அமைக்கப்படும் என்றும் கூறினார். திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் அங்கேயே இருக்கப்போகிறதா? என்றும் இபிஎஸ் கேள்வி எழுப்பினார்.