உயர்நீதிமன்ற உத்தரவின்படி கருணை அடிப்படையில் வேலை வழங்கியதால் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியருக்கு எதிராக பிறப்பித்த பிடிவாரண்டை நீதிமன்றம் திரும்பப் பெற்றது.
செங்கல்பட்டு மாவட்டம், ஆனைகுன்றம் கிராமத்தைச் சேர்ந்த தனி நபர், கருணை அடிப்படையில் வேலை வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
மனுவை விசாரித்த நீதிமன்றம் அவருக்குக் கருணை அடிப்படையில் மூன்று மாதங்களுக்குள் வேலை வழங்குமாறு தமிழக அரசுக்குக் கடந்த 2023-ம் ஆண்டு உத்தரவிட்டது. தொடர்ந்து நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றத் தவறியதாகக்கூறி, தனி நபர் கடந்த 2024-ம் ஆண்டு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தார்.
வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் மாவட்ட ஆட்சியரை நேரில் ஆஜராக உத்தரவிட்ட நிலையில், அவர் ஆஜராகாததால் ஆட்சியருக்கு எதிராக பிணையில் வெளிவரக்கூடிய பிடி வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டது.
இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது நேரில் ஆஜரான மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ், நிர்வாக காரணங்களால் நீதிமன்ற உத்தரவை உடனடியாக நிறைவேற்ற முடியவில்லை என்றும், மனுதாரருக்குத் திருப்போரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இளநிலை உதவியாளர் பணி வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் மனு தாக்கல் செய்தார்.
மேலும், வேண்டுமென்றே நீதிமன்ற உத்தரவை மீறவில்லை என்பதால் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாகவும் மனுவில் தெரிவித்திருந்தார்.
அதனை ஏற்று மாவட்ட ஆட்சியருக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்ட பிடி வாரண்டை திரும்பப் பெற்ற நீதிமன்றம், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பான விசாரணையை ஏப்ரல் 4-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.