குற்றங்களை தடுக்க முடியாமல் காவல்துறையினரின் கைகள் கட்டப்பட்டதால், இன்று அவர்களுக்கே பாதுகாப்பில்லாத சூழல் உள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
உசிலம்பட்டி அருகே முதல்நிலைக் காவலர் முத்துக்குமார் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை சுட்டிக்காட்டி எக்ஸ் தளத்தில் அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.
அதில், மது மற்றும் போதைப்பொருட்களால் குற்றங்கள் பலமடங்கு அதிகரித்து விட்டதாகவும் ஆனால் முதலமைச்சர் தூங்கிக் கொண்டிருக்கிறார் எனவும் குற்றம்சாட்டியுள்ளார்.
குற்றங்களைத் தடுக்க முடியாமல் காவல்துறையினரின் கைகள் கட்டப்பட்டது, இன்று அவர்களுக்கே பாதுகாப்பில்லாத சூழலில் நிறுத்தி உள்ளதாகவும் கூறியுள்ளார்.
சட்டம்-ஒழுங்கு குறித்து முதலமைச்சருக்கு அக்கறை இருந்திருந்தால் மது விற்பனையை முறைப்படுத்தி இருக்க வேண்டும் எனக் கூறியுள்ள அண்ணாமலை, தனது கட்சியினரின் வருமானம் பாதிக்க கூடாது என்பதற்காக எதையும் கண்டுகொள்ளாமல் இருப்பதன் விளைவால் குற்றங்கள் பெருகி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
இனியாவது தனது கட்சியினரின் நலனை விட்டுவிட்டு வாக்களித்த மக்களின் நலன் குறித்து முதலமைச்சர் ல்டாலின் சிந்திப்பாரா? எனவும் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.