அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், சரியான நேரத்தில் அறிவிப்போம் என மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
டைம்ஸ் நவ் செய்தி நிறுவனத்தின் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜம்மு காஷ்மீர் விவகாரம், பொது சிவில் சட்டம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து தனது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.
அப்போது தொகுதி மறுசீரமைப்பு குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக எந்த மாநிலத்திற்கும் அநீதி இழைக்கப்படாது என குறிப்பிட்டார். முற்போக்கு மாநிலமாகக் கருதப்பட்ட தமிழ்நாடு, தற்போதைய திமுக அரசின் கொள்கைகளால் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளதாக, சாட்டினார்.
தொடர்ந்து, அதிமுக உடனான கூட்டணி குறித்துப் பதிலளித்த அவர், அதிமுகவுடன் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது எனவும் சரியான நேரம் வரும் போது அதனைக் கூறுவோம் என்றும் அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமையும் எனத் தெரிவித்தார்.
தமிழ் மொழியில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளை தொடங்காமல் தமிழக மக்களுக்கு எதிராக திமுக செயல்படுகிறது என அமித் ஷா குற்றம் சாட்டினார்.
திமுக தனது ஊழலை மறைக்கவும், வரவிருக்கும் தேர்தலில் உடனடி தோல்வியை தடுக்கவும் மட்டுமே மொழி மற்றும் தொகுதி மறுசீரமைப்பு பிரச்சனையை எழுப்புகிறது என்றும் தொகுதி மறுசீரமைப்பு செய்வதால் யாருக்கும் எந்த அநீதியும் ஏற்படாது என பிரதமர் மோடி வாக்குறுதி அளித்துள்ளார் என அவர் தெரிவித்தார்.
திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், தனது மகனும் துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலினை முன்னிறுத்துவது வாரிசு அரசியலையே ஊக்குவிக்கிறது என அமித் ஷா குற்றம் சாட்டினார்.