சூயிங் கம் மெல்லுபவரா நீங்கள் ? உங்களுக்கான செய்தி தான் இது. சூயிங் கம் மூலமாக, அதிக அளவிலான நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள் உடலுக்குச் செல்கிறது என்று அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். மைக்ரோபிளாஸ்டிக் என்றால் என்ன ? அவை, உடல்நலத்துக்குப் பாதுகாப்பானதா ? விஞ்ஞானிகள் என்ன சொல்லுகிறார்கள் என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
5 மில்லி மீட்டருக்கும் குறைவான விட்டம் கொண்ட சிறிய அளவிலான மைக்ரோபிளாஸ்டிக் முதன் முறையாக 1980களில் கண்டுபிடிக்கப் பட்டது.
தினசரி பயன்படுத்தும் Facial மற்றும் Body க்ரீம்கள், சன் ஸ்க்ரீன்கள், குளியல் GEL கள், பற்பசைகள், மற்றும் சோப்புகளில் மைக்ரோபிளாஸ்டிக் துகள்கள் உள்ளன. கழிவு நீர் அமைப்புக்களில் கொட்டப் படும் இந்த மைக்ரோபிளாஸ்டிக், கடைசியில் கடலில் சென்று சேர்கின்றன.
கடந்த 40 ஆண்டுகளாக சுற்றுச்சூழலை மாசு படுத்தும் மைக்ரோபிளாஸ்டிக் துகள்கள் பெருங்கடல்களில் குவியத் தொடங்கியுள்ளன. இன்று கிட்டத்தட்ட உலகின் அனைத்து நீர்நிலைகளிலும் பரவியுள்ளன. மைக்ரோபிளாஸ்டிக் மீன் உட்பட ஆயிரக் கணக்கான கடல் வாழ் உயிரினங்களைப் பாதிக்கின்றது. சமயங்களில் மனிதர்களையும் பாதிக்கிறது.
இந்த சிறிய துகள்கள் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் மனித கண்ணுக்குத் தெரியாது. கடந்த காலங்களில், உணவு,தண்ணீர், உடை மற்றும் காற்றில் கூட மைக்ரோபிளாஸ்டிக் மாசுபாட்டை விஞ்ஞானிகள் ஆய்வு செய்துள்ளனர்.
உணவுகள், பானங்கள், பிளாஸ்டிக் பேக்கேஜிங், பூச்சுகள் மற்றும் உற்பத்தி செயல்முறைகள் மூலம் ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக்கணக்கான மைக்ரோபிளாஸ்டிக் துகள்களை மனிதர்கள் உட்கொள்கிறார்கள் என்று விஞ்ஞானிகள் மதிப்பிட்டுள்ளனர்.
இப்போது தான் முதல்முறையாக, கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் சூயிங் கம் மெல்லும்போது என்ன நடக்கிறது என்பதை ஆய்வு செய்துள்ளனர்.
பொதுவாக சூயிங் கம் பாலிமர்கள் எனப்படும் நீண்ட மூலக்கூறுகளைக் கொண்டுள்ளது. சிலவகை சூயிங் கம் இயற்கை பாலிமர்களைக் கொண்டுள்ளது. மற்றவை பெட்ரோலியத் தொழிலில் இருந்து பெறப்பட்ட செயற்கை பாலிமர்களைக் கொண்டுள்ளன. எதுவானாலும், இவை பிளாஸ்டிக்குகளைப் போலவே இருக்கின்றன.
இந்த இரண்டு வகையான சூயிங்கத்தையும் ஆய்வு செய்த விஞ்ஞானிகள், அதற்காக ஒருவரை நான்கு நிமிடங்கள் மெல்ல வைத்தனர். அந்த உமிழ்நீரைச் சேகரித்து ஆய்வுக்கு உட்படுத்தினர்.
வாயில் வைத்து மெல்லும்போது இந்த இரண்டு வகையான சூயிங் கமும் ஒரே அளவிலான மைக்ரோபிளாஸ்டிக்கை வெளியிடுகிறது என்பதை இந்த ஆய்வின் மூலம் கண்டு பிடித்துள்ளனர்.
சராசரியாக, ஒவ்வொரு கிராம் சூயிங் கமும் 100 மைக்ரோபிளாஸ்டிக் துகள்களை உமிழ்நீரில் வெளியிட்டுள்ளதாகக் கூறியுள்ள விஞ்ஞானிகள், அதிலும் சில சூயிங் கம் கிராமுக்கு 600 மைக்ரோபிளாஸ்டிக்களை வெளியிட்டதாகக் கூறியுள்ளனர். .
இதன் படி, 2 முதல் 6 கிராம் வரை எடை கொண்ட சூயிங் கம், 3,000 மைக்ரோ பிளாஸ்டிக் துகள்களைவெளியிடும் என்று கூறப்பட்டுள்ளது. அதாவது, ஆண்டுக்கு 180 சூயிங் கம் மெல்லுபவர்கள் சுமார் 30,000 மைக்ரோபிளாஸ்டிக் துகள்களை உட்கொள்வார்கள் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
சூயிங் கம் மெல்லுவது போன்ற வழக்கமான செயல்களின் மூலம், அறியாமலேயே நூற்றுக்கணக்கான மைக்ரோபிளாஸ்டிக் துகள்களால் பாதிக்கப்படுவதை இந்த ஆராய்ச்சி விளக்கியுள்ளது.
சூயிங் கம் மெல்லும் பழக்கத்தை விட்டுவிட வேண்டிய நேரம் இதுவாக இருக்கலாம். செரிமான அமைப்பை மைக்ரோபிளாஸ்டிக் குப்பைத் தொட்டியாக மாற்றாமல், சுவாசத்தைப் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க வேறு நல்ல வழியைத் தேடுவதே நல்லது ஆகும்.