அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திடாவிட்டால் மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்படும் என்ற அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஈரானை எச்சரித்துள்ளார். ட்ரம்பின் அச்சுறுத்தலுக்குப் பதிலடியாக, அமெரிக்காவின் மீது ஏவுகணை தாக்குதலுக்குத் தயார் என்று ஈரான் அறிவித்துள்ளது. இதனால், இருநாடுகளுக்கும் இடையே போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட மறுப்பது ஏன்? பேச்சு வார்த்தைகள் தோல்வி அடைய என்ன காரணம் ? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
அதிபராகப் பதவியேற்றதில் இருந்தே ட்ரம்ப், உலக அரசியலின் ஒழுங்கைத் தலைகீழாக மாற்றி வருகிறார். குறிப்பாக ஈரானுடன் கண்டிப்பான அணுகுமுறையை மேற்கொண்டுள்ளார். இதனால், ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான உறவு நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது.
எப்போது வேண்டுமானாலும் அமெரிக்காவால், ஆபத்து ஏற்படலாம் என்ற நிலையில், அணுஆயுதங்களை வைத்திருப்பது தான் தங்களுக்குப் பாதுகாப்பு என்று நம்பும் ஈரான், அணுசக்தி ஆயுதங்கள் உற்பத்தியில் தீவிரமாக இறங்கி உள்ளது. இந்நிலையில், அணுஆயுதங்களைத் தயாரிக்கக் கூடாது என்று ட்ரம்ப் தொடர்ந்து ஈரானை வலியுறுத்தி வருகிறார்.
2015ம் ஆண்டு ஏற்பட்ட ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து, 2018 ஆம் ஆண்டு ட்ரம்ப் ஒருதலைப்பட்சமாக விலகினார். மேலும், ஈரான் மீது பொருளாதாரத் தடைகளையும் ட்ரம்ப் விதித்தார். இருந்த போதிலும், ஒரு பக்கம் அமெரிக்காவுடன் மறைமுக பேச்சுவார்த்தைகளை நடத்தி வந்த ஈரான், ஒப்புக் கொள்ளப்பட்ட வரம்புகளை மீறி யுரேனியம் செறிவூட்டல் திட்டத்தைச் செயல்படுத்தி வந்தது.
இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபரான ட்ரம்ப், அணு ஆயுதங்களை ஈரான் தயாரிக்கக் கூடாது என்று வலியுறுத்தி ஈரானுக்கு அதிகபட்ச அழுத்தத்தைக் கொடுத்து வருகிறார். ஈரானின் அணு ஆயுதத் திட்டத்தை முற்றிலுமாக தடை செய்யும் வகையில் ஒரு புதிய அணுசக்தி ஒப்பந்தத்தை அமெரிக்க முன்மொழிந்துள்ளது.
மேலும், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைகளை உடனடியாக தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தி, ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா கொமேனிக்கு, ட்ரம்ப் கடிதமும் எழுதியிருந்தார். அதில் புதிய அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட 60 நாட்கள் கெடுவும் ட்ரம்ப் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், நேரடி பேச்சுவார்த்தைகளை நடத்த முடியாது என்ற நிலைப்பாட்டில் ஈரான் உறுதியாக உள்ளது. இத்தகவலை, உறுதிப்படுத்தியுள்ள ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன், மறைமுக பேச்சுவார்த்தைகளுக்குத் தயாராக உள்ளதாகத் தெரிவித்திருக்கிறார்.
கொள்கையளவில் பேச்சுவார்த்தைகளுக்கு ஈரான் எதிரானது இல்லை என்றாலும், முதலில், நம்பகத் தன்மையை அமெரிக்கா நிரூபிக்கட்டும் என்றும் கூறியுள்ளார். புதிய அணுசக்தி திட்டம் தொடர்பான ஒப்பந்தத்தில், கையெழுத்திட மறுத்தால், முன்னெப்போதும் இல்லாத அளவில் ஈரான் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்படும் என்று ட்ரம்ப் எச்சரித்துள்ளார். ஒட்டு மொத்தமாகச் சர்வதேச அளவில் ஈரானை தனிமைப் படுத்தும் நோக்கத்தில், இரண்டாம் கட்ட வரிகளும் ஈரான் மீது விதிக்கப் படும் என்றும் ட்ரம்ப் அச்சுறுத்தியுள்ளார்.
ட்ரம்ப் மிரட்டலுக்குத் தாக்குதலைச் சந்திக்கத் தயார் என்று ஈரான் பதிலடி தந்துள்ளது. அமெரிக்காவின் வான்வழித் தாக்குதல்களைத் தாங்கும் வகையில், நாடு முழுவதும் உள்ள நிலத்தடிகளுக்குள், ஏராளமான ஏவுகணைகள் எதிர்த்தாக்குதலுக்குத் தயாராக இருப்பதாக ஈரான் ராணுவத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ்
தளத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
முன்னதாக, “ஏவுகணை நகரம்” என்று குறிப்பிட்டு, 85 வினாடிகள் ஓடக்கூடிய வீடியோவை, ஈரானின் புரட்சிகர காவல்படை வெளியிட்டுள்ளது. அதில், ஈரானின் மேம்பட்ட ஆயுதங்களும் அதன் துருப்புக்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதுபோன்று, வாரத்துக்கு ஒரு ஏவுகணை நகரத்தைக் காட்ட நாங்கள் தொடங்கினால், 2 ஆண்டுகள் போதாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எத்தனை ஏவுகணை நகரங்களை ஈரான் உருவாக்கி வைத்திருகிறதோ? என்ற அச்சத்தை இந்த வீடியோ ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா- ஈரான் உறவுகள் மேலும் மோசமடைந்தால், அது அமெரிக்காவுக்கும் அதன் நட்பு நாடுகளுக்கும் நல்லதல்ல என்றும் எச்சரித்துள்ள ஈரான், மேற்கு ஆசியாவில் ஏமனில் உள்ள அமெரிக்காவின் ஸ்டெல்த் B-2 இராணுவ போர் விமானத் தளம் உட்படத் தான் குறிவைத்துள்ள அமெரிக்க இராணுவத் தளங்களின் பட்டியலையும் ஈரான் வெளியிட்டுள்ளது.
சொல்லப்போனால், மேற்கு ஆசியாவிலேயே மிக அதிக அளவிலான பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஈரான் வைத்துள்ளது. ஈரானின் மிக நீண்ட தூர ஏவுகணைகள், 2,000 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்தில் உள்ள இலக்குகளையும் துல்லியமாகத் தாக்கக் கூடிய திறன் கொண்டவை ஆகும்.
மேற்கு ஆசியா முழுவதையும் ஐரோப்பாவின் பெரும்பாலான பகுதிகளையும் எளிதில் தாக்கி அழிக்கும் வல்லமை தங்களிடம் இருப்பதை ஈரான் வெளிப்படையாகக் காட்டியுள்ளது. ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது தீவிர தாக்குதலைத் தொடங்கியுள்ள அமெரிக்கா எந்த நேரத்திலும் ஈரான் மீது தாக்குதலைத் தொடங்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உக்ரைன்- ரஷ்யா போர், இஸ்ரேல்- ஹமாஸ் போர் வரிசையில், ஈரான்- அமெரிக்கா போர் ஏற்பட்டால், அது சர்வதேச அளவில் பெரும் ஆபத்தாக முடியும் என்று கணிக்கப்பட்டுள்ளது.