ஆரோக்கிய வாழ்வுக்கு யோகா நல்லது எனப் பிரதமர் மோடி கூறிவரும் நிலையில், உடல் பருமன் நோய்க்கு மருந்தாக, மைக்ரோ சாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் புதிய ஆலோசனைகளைத் தந்திருக்கிறார். உடல் எடை குறைக்க பில் கேட்ஸ் சொல்லும் ஆலோசனைகள் என்ன ? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு
இன்றைய வாழ்க்கை முறையும் அதன் காரணமாக ஏற்படும் நோய்களும் உடல்நலத்துக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக மாறி வருகிறது. குறிப்பாக, உடல் பருமனாக இருப்பது, பல நோய்களுக்குக் காரணமாக உள்ளது. உடலில் சேரும் அதிகப்படியான கொழுப்பினால் உடல் பருமன் ஏற்படுகிறது.
உடல் பருமன் மிகவும் ஆபத்தானதாகும். Body Mass Index (BMI ) தான், உடல் பருமனை வகைப்படுத்த பயன்படுத்தப்படும் அளவீடு ஆகும். அதிக எடை இருக்கிறதா, உடல் பருமன் இருக்கிறதா அல்லது கடுமையான உடல் பருமன் இருக்கிறதா என்பதை அறிய Body Mass Index (BMI ) அளவீடு பயன்படுத்தப் படுகிறது.
அதன்படி, 25 அல்லது அதற்கு மேற்பட்ட BMI அளவீடு OVER WEIGHT எனப்படுகிறது. 30 அல்லது அதற்கு மேற்பட்ட BMI அளவீடு Obesity எனப்படுகிறது. 2050 ஆம் ஆண்டுக்குள் 44 கோடிக்கும் அதிகமான இந்தியர்கள் உடல் பருமனால் பாதிக்கப்படுவார்கள் என்று சமீபத்தில் வெளிவந்த உடல் பருமன் குறித்த ஒரு அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
மூன்று பேரில் ஒருவருக்கு உடல் பருமனால் கடுமையான நோய்கள் ஏற்படும் என்று கணிக்கப் பட்டுள்ளது. அதாவது, ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவர் உடல் பருமனால் பாதிக்கப்படுவார்.நாட்டுக்கே இது ஒரு பெரிய நெருக்கடியாகும். எனவே, உடல் பருமனை எதிர்த்துப் போராட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய பிரதமர் மோடி, உடற்பயிற்சியை வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்ற வேண்டும் என்றும் தினமும் சில கிலோமீட்டர்கள் நடக்க வேண்டும் என்றும், சைக்கிள் ஓட்ட வேண்டும் என்றும், அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சமையல் எண்ணெய் பயன் பாட்டை 10 சதவீதம் குறைக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் வைத்திருந்தார்.
இந்தச் சூழலில், Raj Shamani-யின் பாட் காஸ்டில் பங்கேற்ற மைக்ரோ சாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ், வாழ்க்கையின் பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேசியுள்ளார். பணத்தால் சரிசெய்ய முடியாத ஒரு பிரச்சனை என்ன? என்ற கேள்விக்கு உடல்பருமன் என்று பதிலளித்துள்ள பில் கேட்ஸ், உடல் பருமனை குறைப்பது பற்றியும், எடை இழப்பு மருந்துகள் பற்றியும் தெரிவித்துள்ளார்.
அடிக்கடி இந்தியாவுக்கு வந்துசெல்லும் பழக்கம் உள்ள பில் கேட்ஸ், பிரதமர் மோடி, உடல்நலத்துக்கு யோகா வலியுறுத்துவதைப் பார்த்ததாகவும், யோகா நல்லது தான் என்றாலும் அதைப் பயிற்சி செய்வது கஷ்டமாக இருக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் உடல் பருமனை குறைப்பதற்கான, GLP-1 என்ற மருந்தையும் பரிந்துரை செய்திருக்கிறார் பில் கேட்ஸ்.
GLP-1 தான் அமெரிக்காவில் உடல் பருமனுக்கு அங்கீகரிக்கப்பட்ட முதல் மருந்து ஆகும். Novo Nordisk நோவோ நோர்டிஸ்க்கின் Saxenda என்ற இந்த மருந்தை, ஒரு நாளைக்கு இரண்டு முறை ஊசி மூலம் செலுத்திக் கொள்ள வேண்டும்.
அப்படி செய்தால், 12 மாதங்களில் 7% எடை குறையும் என்று அறிவியல் ரீதியாக நிரூபிக்கப் பட்டுள்ளது. அதிக எடை மற்றும் உடல் பருமனுக்கு சிகிச்சையளிக்க பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள் வெவ்வேறு வழிகளில் செயல்படுகின்றன. உதாரணமாக, சில மருந்துகள் பசியைக் குறைக்கவோ அல்லது விரைவில் வயிறு நிரம்பியதாக உணரவோ வைக்கும்.
உடல்பருமனை குறைப்பதற்கு, ‘behaviour change’ நல்ல பலன் கொடுக்கும் என்று ஒப்புக்கொண்டுள்ள பில் கேட்ஸ், அத்துடன் எடை குறைப்பு மருந்துகளை எடுத்துக் கொள்வதும் அவசியம் என்று கூறியுள்ளார்.
எடை இழப்பு மருந்து எடையைக் குறைக்க உதவும் என்றாலும், உடல் எடையைப் பராமரிக்க உடற்பயிற்சியையும் ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தையும் பின்பற்ற வேண்டும் என்றும் பில் கேட்ஸ் வலியுறுத்தி உள்ளார்.