சட்டப்பேரவையில் திமுக கச்சத்தீவை மீட்கக்கோரி தீர்மானம் நிறைவேற்றுவது நகைமுரண் மட்டுமல்ல அது அரசியல் நாடகம் என்பதை தமிழக மக்களும், மீனவர்களும் நன்றாக அறிந்திருக்கிறார்கள் என்று பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
1974 ஆம் ஆண்டு கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது யார்? காங்கிரஸை சேர்ந்த அன்றைய பாரத பிரதமர் இந்திராகாந்தி அம்மையார் தானே? இந்திராகாந்தி அம்மையார் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்த போது கச்சத்தீவு, மிச்சத்தீவு, சொச்சத்தீவு என எதுகை மோனையாக வசனம் பேசி அதற்கு இசைவு தெரிவித்து மறைமுகமாக அதற்கு ஆதரவளித்த தமிழக முதல்வர் யார்? என எச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.
1974 ஆம் ஆண்டு தமிழக முதல்வராக இருந்த திமுக தலைவர் மு.கருணாநிதி தானே? 2004 முதல் 2014 வரை மன்மோகன் சிங் அவர்கள் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் 10 ஆண்டுகள் மத்திய அமைச்சரவையில் அங்கம் வகித்தபோது கச்சத்தீவை திரும்பப்பெற அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் திமுக சார்பில் அப்போது எந்தவித முயற்சியும் எடுக்கவில்லையே ஏன்? என எச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.
மத்தியில் காங்கிரஸோடு கூட்டணி வைத்து மத்திய அமைச்சரவையில் அங்கம் வகித்த 2004 – 2014 காலகட்டத்தில் தமிழகத்தில் 2006 – 2011 வரை திமுக தானே ஆட்சியில் இருந்தது என்று குறிப்பிட்டவர், கச்சத்தீவை திரும்பப்பெற மன்மோகன்சிங் அவர்கள் தலைமையிலான அன்றைய காங்கிரஸ் அரசை வலியுறுத்தி தமிழக சட்டமன்றத்தில் திமுக சார்பில் அப்போது தீர்மானம் நிறைவேற்றாதது ஏன்? தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களே இந்த கேள்விக்கு முதலில் பதிலளியுங்கள்? என எச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த நான்கு தினங்களுக்கு முன்னால் நாடாளுமன்றத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் திரு.ஜெய்சங்கர் அவர்கள் பேசும்போது இந்திய மீனவர்கள் சந்தித்து வரும் பிரச்சனைகள் அனைத்திற்கும் 1974 – 1976 காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் தான் காரணம் என்று குறிப்பிட்டுள்ளார்.
கடல்சார் மீன்பிடி பிரச்சனை என்பது இந்திய – இலங்கை பிரச்சனையாக இல்லாமல் சர்வதேச பிரச்சனையாக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்திய மீனவர்களை பாதுக்காப்பதற்கும், அவர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கும் பாரத பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு உறுதியான ஆக்கபூர்வமான ராஜ்ய ரீதியிலான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை அரசுடன் ஆக்கபூர்வமான பேச்சு வார்த்தையை நடத்தி தீர்வு காண்பதற்கு முயற்சி மேற்கொள்ளும் நடவடிக்கைகளே மீனவர்கள் பிரச்சனைக்கான நிரந்தர தீர்வே தவிர தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவது அரசியல் மேடைகளில் அதுகுறித்து பேசுவதால் எந்த வித பயனும் இல்லை என்பதை திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் உணரவேண்டும் என எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
அன்று காங்கிரஸோடு சேர்ந்து கச்சத்தீவை தாரை வார்க்க இலங்கைக்கு ஆதரவாக செயல்பட்ட திராவிட முன்னேற்ற கழகம் இன்று தமிழக சட்டமன்றத்தில் கச்சத்தீவை மீட்கக்கோரி தீர்மானம் நிறைவேற்றுவது நகைமுரண் மட்டுமல்ல அது அரசியல் நாடகம் என்பதை தமிழக மக்களும், மீனவர்களும் நன்றாக அறிந்திருக்கிறார்கள் என எச்.ராஜா குறிப்பிட்டுள்ளார்.