திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கல்லூரி மாணவி உயிரிழந்த வழக்கில் திடீர் திருப்பமாக அவரது அண்ணனே இரும்பு கம்பியால் அடித்துக் கொலை செய்தது தெரியவந்துள்ளது.
பல்லடம் அருகே பருவாய் கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி வித்யா, மர்மமான முறையில் உயிரிழந்தார். இவரது உடலைப் பெற்றோர் இடுகாட்டில் புதைத்த நிலையில், மாணவியின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது காதலர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து மாணவியின் உடலைத் தோண்டி எடுத்து இடுகாட்டில் வைத்தே பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது, மாணவியின் தலையில் பலத்த காயமிருப்பது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து மாணவியின் தந்தை மற்றும் அண்ணனை அழைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது மாணவியை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்ததை அவரது அண்ணன் சரவணன் ஒப்புக்கொண்டார். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த இளைஞரைத் தனது தங்கை காதலித்ததால் ஆணவக் கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்தார். இதைத் தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார், மாணவியின் தந்தை தண்டாயுதபாணியிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.