கடலூர் அருகே லாரி ஓட்டுநர்களைத் தாக்கி மர்மநபர்கள் வழிப்பறியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி – நாகை தேசிய நெடுஞ்சாலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள் சென்று வரும் நிலையில், எம்.புதூர் பகுதியில் வாகனங்களை மறித்து மர்மகும்பல் வழிப்பறியில் ஈடுபடுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில், புதுச்சேரியிலிருந்து மயிலாடுதுறைக்குச் சென்ற லாரியை வழிமறித்து, ஓட்டுநர் காளிமுத்துவை அரிவாளால் தாக்கி செல்போன் மற்றும் பணத்தை பறித்துக் கொண்டு மர்மநபர்கள் தப்பியோடியுள்ளனர்.
இதேபோல் மற்றொரு லாரி ஓட்டுநரான மணிமாறன் என்பவரையும் கத்தியால் தாக்கி வழிப்பறி செய்துள்ளனர். தாக்குதலில் காயமடைந்த இருவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தேசிய நெடுஞ்சாலையில் மது மற்றும் கஞ்சா போதையில் வழிபறியில் ஈடுபடும் இளைஞர்களை காவல்துறையினர் உடனடியாக கைது செய்ய வேண்டும் என லாரி ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.