வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதா கொண்டு வரப்படவில்லை என்றால், நாடாளுமன்ற வளாகமும் வக்ஃபு வசம் சென்றுவிடும் என மக்களவையில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.
வக்ஃபு வாரிய நிர்வாகத்தில் பெண்களும் இடம்பெறும் வகையிலான சட்டத்திருத்த மசோதாவை மக்களவையில் மத்திய சிறுபான்மை விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு அறிமுகப்படுத்தினார்.
தொடர்ந்து நடைபெற்ற விவாதத்தின் மீது பேசிய அவர், முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் 123 சொத்துகள் வக்ஃபு சொத்தாக வகைப்படுத்தப்பட்டு அந்த வாரியத்திடம் வழங்கப்பட்டதாகக் கூறினார்.
இதே நிலைமை நீடித்தால், தற்போது எம்பிக்கள் அமர்ந்திருக்கும் நாடாளுமன்ற கட்டடம் கூட வக்ஃபு வசம் செல்ல நேரிடும் என்று கூறிய அவர், மத நிறுவனங்கள், அமைப்புகள் மற்றும் நடைமுறைகளில் குறுக்கிடுவது வக்ஃபு வாரிய சட்டத்திருத்தத்தின் நோக்கமல்ல என்றும் விளக்கினார்.
உலகில் அதிகளவிலான வக்ஃபு சொத்துகளைக் கொண்ட நம் நாட்டில், ஏழைகளின் கல்வி, மருத்துவம் மற்றும் திறன் மேம்பாட்டுக்கு அவற்றை ஏன் பயன்படுத்தக் கூடாது என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
மேலும், வக்ஃபு நிர்வாகத்தில் இரண்டு பெண்கள் இடம்பெறுவதற்கான அவசியத்தையும் கிரண் ரிஜிஜு உதாரணத்துடன் விளக்கினார்.