சுமார் 100 நாடுகள் மீது பரஸ்பர வரியை அறிவித்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்த புதிய வரி விதிப்பு அமெரிக்காவின் வெற்றிக்கு வித்திடும் என்றும், அமெரிக்காவின் புதிய “விடுதலை தினம்” என்றும் குறிப்பிட்டுள்ளார். ட்ரம்பின் பரஸ்பர வரி நடவடிக்கை, அமெரிக்காவை செழிப்பாக்குமா ? அல்லது அமெரிக்கர்களைப் பாதிக்குமா ? என்பது பற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
அமெரிக்காவை மீண்டும் முதன்மையான நாடாக்குவோம் என்ற பிரச்சாரத்தின் மூலம் நாட்டின் அதிபராக பதவியேற்ற ட்ரம்ப், பல அதிரடி, அடாவடி உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார்.
அதில் ஒன்று தான், மற்ற நாடுகளின் மீதான பரஸ்பர வரி விதிப்பு. குறைந்தபட்சமாக 10 சதவீதம் முதல், 40 சதவீதத்துக்கும் அதிகமாக பரஸ்பர வரி விதித்து, உலக பொருளாதாரத்தில் இடியாப்பச் சிக்கலை உருவாக்கி உள்ளார்.
டிவியில் வரும் ஒரு ரியாலிட்டி ஷோ போல, வெள்ளை மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில், ட்ரம்ப், தள்ளுபடி விலையில் பரஸ்பர வரி கட்டணம் என்று ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளார். அமெரிக்கா மீது மற்ற நாடுகள் விதித்த வரிகளையும் அந்தந்த நாடுகள் மீதான அமெரிக்காவின் வரியையும் ஒப்பிடும் விளக்கப்படத்தையும் காட்டி ட்ரம்ப் விளக்கியுள்ளார். ட்ரம்ப் காட்டிய பட்டியல் புள்ளிவிவரங்களுக்குப் பின்னால் உள்ள கணக்கீடு முறையாக இல்லை என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
அனைத்து நாடுகளுக்கும் அடிப்படை வரியாக 10 சதவீதம் இறக்குமதி வரி, வரும் ஏப்ரல் 5 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. மேலும், அனைத்து வெளிநாட்டு வாகனங்களுக்கும் 25 சதவீத வரி, உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.
ட்ரம்பின் பரஸ்பர வரிவிதிப்பு பட்டியலில், கம்போடியாவுக்கு 49 சதவீதமும் , வியட்னாமுக்கு 46 சதவீதமும்,இலங்கைக்கு 44 சதவீதமும், வங்க தேசத்துக்கு 37 சதவீதமும், தாய்லாந்துக்கு 36 சதவீதமும், சீனாவுக்கு 34 சதவீத வரியும், தாய்லாந்துக்கு 36 சதவீதமும், இந்தோனேசியாவுக்கும் தைவானுக்கும் 32 சதவீதமும், சுவிட்சர்லாந்துக்கு 31 சதவீதமும், தென்கொரியாவுக்கு 25 சதவீதமும், மலேசியாவுக்கும், ஜப்பானுக்கும் 24 சதவீதமும் இறக்குமதி வரி விதிப்பட்டுள்ளது. மேலும், ஐரோப்பிய ஒன்றியத்துக்கு 20 சதவீத வரியும், பிரிட்டனுக்கு 10 சதவீதமும், பாகிஸ்தானுக்கு 29 சதவீத வரியும் விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியா உள்ளிட்ட சுமார் 60 நாடுகளை மிகவும் மோசமான வரி குற்றவாளிகள் என்று குறிப்பிட்டுள்ள வெள்ளை மாளிகை, அந்த நாடுகளுக்கான பிரத்யேக வரி விதிப்பு, வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி அமலுக்கு வரும் என்று தெரிவித்துள்ளது.
யார் மோசமான குற்றவாளிகள் என்ற கேள்விக்கு, அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரி விதிப்பவர்கள், வரிகள் தவிர்த்துப் பிற தடைகளை செய்பவர்கள், அமெரிக்க பொருளாதாரத்தைச் சீர்குலைக்கும் செயலில் ஈடுபவர்கள் என அமெரிக்கா கருதும் நாடுகளே மோசமான குற்றவாளிகள் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
ட்ரம்பின் இந்த நடவடிக்கையால் சீனா 54 சதவீத மொத்த வரி விகிதத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்தியப் பொருட்களுக்கு 26 சதவீத வரியை விதித்துள்ளது.
இந்தியாவுக்கான பரஸ்பர வரி, அமெரிக்காவில் மருந்துகளின் விலைகளை அதிகரிக்கும். அதனால் அமெரிக்கர்களுக்கு மருத்துவச் செலவு கூடும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
மருந்து பொருட்கள் மட்டுமின்றி, கார், காபி மற்றும் துணிகளுக்கு அமெரிக்கர்கள் அதிக செலவு செய்ய வேண்டியிருக்கும் என்று கூறப்படுகிறது.
குறிப்பாக,இந்தியா, கனடா மற்றும் மெக்சிகோவிலிருந்து வரும் கார் உதிரி பாகங்கள் மீதான வரிகளால் ஆடி, பிஎம்டபிள்யூ, ஜாகுவார்-லேண்ட் ரோவர், மெர்சிடிஸ் பென்ஸ், ஜெனிசிஸ் மற்றும் லெக்ஸஸ் சொகுசு செடான்கள் மற்றும் எஸ்யூவிகள் ஆகிய கார்களின் விலை சுமார் 10,000 அமெரிக்க டாலர் வரை உயரலாம் என்று மதிப்பிடப் பட்டுள்ளது.
அமெரிக்காவில், வால்மார்ட் மற்றும் டார்கெட் போன்ற அமெரிக்க கடைகளில் விற்கப்படும் பெரும்பாலான ஆடைகள் மற்றும் காலணிகள் சீனா, வியட்நாம் மற்றும் வங்கதேசத்தில் உற்பத்தியாகின்றன. பரஸ்பர வரியால் ,அவற்றின் விலையும் உயரலாம் எனக் கூறப் படுகிறது
சுவிஸ் கடிகாரங்கள், மது மற்றும் காபி வகைகள், ஐபோன்கள், ஐபேட்கள் உள்ளிட்ட ஆப்பிள் சாதனங்கள்,மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களின் விலையும் எண்ணிப்பார்க்க முடியாத அளவுக்கு அதிகமாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் அறிகுறியாக, அமெரிக்க பங்குச் சந்தையில் பெரும் சரிவை ஏற்படுத்தியுள்ளது. ட்ரம்பின் அறிவிப்பைத் தொடர்ந்து, ஃபேஷன் பங்குகள் மட்டுமின்றி, லுலுலெமன் பங்குகள் 10 சதவீதத்துக்கும் மேலாக சரிந்துள்ளன. நைக் மற்றும் ரால்ப் லாரன்ஸின் பங்குகள் ஏழு சதவீதம் சரிந்துள்ளன. மேலும், சீனா உட்பட ஆசியாவின் பங்கு சந்தைகளும் எதிர்பாராத சரிவைக் கண்டுள்ளன.
மொத்த உலகத்தின் மீதே ஒரு வர்த்தகப் போரை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொடங்கி உள்ளார். ட்ரம்பின் வரி கொள்கையால் உலகளாவிய பொருளாதாரம் பாதிக்கப் படும் என்றும், அதனால், புவிசார் அரசியலில் அமெரிக்கா தனிமைபடுத்தப்படும் என்றும் அரசியல் வணிக வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.