சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு மதுரையில் உள்ள மீனாட்சி அம்மன் கோயிலில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்வு வெகு விமரிசையாக நடைபெற்றது.
பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோயிலில் ஆண்டு தோறும் நடத்தப்படும் சித்திரைத் திருவிழா இந்தாண்டும் சிறப்பாக நடத்தப்பட உள்ளது.
அதற்கான கொடியேற்ற நிகழ்வு வரும் 29ம் தேதி நடைபெற உள்ள நிலையில் இன்று முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. சித்திரைத் திருவிழாவிற்கான பணிகளைத் தொடங்கும் வகையில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்வு இன்று நடைபெற்றது.
முன்னதாக கோயில் யானை முன் செல்ல முகூர்த்தக்கால் மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. பின்னர் கீழமாசி வீதியில் உள்ள தேரடி கொட்டகையில் வேத மந்திரங்கள் முழங்க முகூர்த்தக்கால் நடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்திலும் முகூர்த்தக்கால் நடப்பட்டது. இதில் கோவில் இணை ஆணையர் கிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.