ஆசிரியர் தகுதித் தேர்வு அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும் என உயர்நீதிமன்றம் மதுரை கிளை தெரிவித்துள்ளது.
மேலூர் அருகே உள்ள சிறுபான்மையினர் அரசு உதவி பெறும் பள்ளியில் பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்கு TET தேர்வு கட்டாயம் என்பதை ரத்து செய்து, தனக்குப் பணி வழங்க வலியுறுத்தி பஷீர் என்பவர் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இதனை ஏற்றுத் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு எதிராகக் கல்வித் துறை சார்பில், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல் முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இதனை விசாரித்த இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, TET எனும் ஆசிரியர் தகுதித் தேர்வு சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும் எனத் தெரிவித்தது.
மேலும், இந்த வழக்கில் டிஇடி தகுதி இல்லாததால் பணி நியமனத்திற்கான ஒப்புதலை வழங்க முடியாது எனக் கூறிய நீதிபதிகள், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவையும் ரத்து செய்தனர்.