எம்புரான் பட இயக்குனர் பிருத்விராஜுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கோல்ட், ஜன கண மன, கடுவா ஆகிய மூன்று படங்களை பிருத்விராஜ் தயாரித்து நடித்திருந்தார். இதில், அவர் நடிகருக்கான சம்பளத்தைப் பெறாமல் இணை தயாரிப்பாளராக சுமார் 40 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாகக் கூறப்படுகிறது. இதற்கான வருமான கணக்குகளைக் கேட்டு வருமான வரித்துறை பிருத்விராஜுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வருகிற 29-ம் தேதிக்குள் பதிலளிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே எம்புரான் படத் தயாரிப்பாளர் கோகுலம் கோபாலின், சிட் பண்ட் அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 1 கோடியே 50 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அன்னிய செலாவணி மேலாண்மை சட்டத்தின் கீழ் நடைபெற்ற இந்த சோதனையில் பல்வேறு ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. முன்னதாக இந்த சோதனைக்கும், எம்புரான் பட சர்ச்சைக்கும் தொடர்பில்லை என அமலாக்கத்துறை விளக்கமளித்திருந்தது.