பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று இலங்கை அதிபர் திசநாயக்க ‘இலங்கை மித்ர விபூஷண் என்ற விருதை வழங்கி கௌரவித்தார்.
இதற்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி, இது இந்தியா மற்றும் இலங்கை மக்களுக்கு இடையே ஆழமாக வேரூன்றிய நட்பு மற்றும் வரலாற்று உறவுகளை அடையாளப்படுத்துவதாக கூறினார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
“ஜனாதிபதி திசாநாயக்க அவர்களால் இன்றைய தினம் ‘இலங்கை மித்ர விபூஷண்’ என்ற விருது எனக்கு வழங்கப்பட்டமை மகத்தான பெருமைக்குரிய விடயமாகும்.
இந்த உயரிய கௌரவம் எனக்கே மட்டும் உரித்தான ஒன்றல்ல, இந்தியாவின் 1.4 பில்லியன் மக்களுக்கும் கிடைக்கப்பெற்ற உயர் மரியாதையாகும்.
அத்துடன் இந்திய – இலங்கை மக்களிடையிலான வரலாற்று ரீதியான உறவுகள் மற்றும் ஆழ வேரூன்றிக் காணப்படும் நட்புறவை இது குறித்து நிற்கின்றது. இந்த கௌரவத்துக்காக இலங்கை ஜனாதிபதி, அரசாங்கம் மற்றும் மக்கள் அனைவருக்கும் பிரதமர் மோடி இதயபூர்வமான நன்றியை தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அவர்களுடன் கொழும்பில் விரிவானதும் பயனுள்ளதுமான பேச்சுகளில் ஈடுபட்டிருந்தேன். சில மாதங்களுக்கு முன்னர், ஜனாதிபதியாக பதவியேற்றபின்னர் தனது முதலாவது வெளிநாட்டு பயணத்துக்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்கள் இந்தியாவை தெரிவுசெய்திருந்தார்.
தற்போது, அவரது பதவிக்காலத்தில் இலங்கைக்கு விஜயம் செய்த முதலாவது வெளிநாட்டுத் தலைவர் என்ற பெருமை என்னை சார்ந்துள்ளது. இந்திய இலங்கை உறவுகளுக்காகவும் நமது இரு நாடுகளிடையிலும் காணப்படும் பிரிக்க முடியாத பிணைப்புக்காகவும் அவர் கொண்டிருக்கும் தனிப்பட்ட உறுதிப்பாட்டினை இது பிரதிபலிக்கின்றது என்று தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்தியாவுக்கு விஜயம் செய்த காலப்பகுதி முதல், குறிப்பாக சக்தித்துறை, சூரிய சக்தி, தொழில்நுட்பம் மற்றும் ஏனைய பல துறைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று நடைபெற்ற பேச்சுகளின்போது பாதுகாப்பு, வர்த்தகம், விவசாயம், வீட்டுவசதிகள், கலாசாரம் மற்றும் ஏனைய துறைகளில் காணப்படும் உறவுகளுக்கு மேலும் உத்வேகமளிப்பதற்கான வழிமுறைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.