பாம்பன் புதிய ரயில் பாலத்தைப் பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
இலங்கை பயணத்தை நிறைவு செய்துவிட்டு பகல் 12 மணியளவில் பிரதமர் மோடி ராமேஸ்வரத்திற்கு வருகை தருகிறார். அப்போது பாம்பனில் அமைக்கப்பட்டுள்ள புதிய ரயில் பாலத்தைப் பிரதமர் திறந்துவைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
தமிழகத்தின் பெரும் நிலப்பரப்புடன் ராமேஸ்வரம் தீவை இணைக்கும் வகையில்
2.08 கிலோ மீட்டர் நீளத்துக்குக் கடலின் மீது ரயில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. 550 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள இந்தப் பாலம், இந்தியாவின் முதல் செங்குத்து தூக்குப் பாலம் ஆகும்.. இதன் மூலம், ராமேஸ்வரம் மக்களும் ராமநாதசுவாமி கோயிலுக்குச் செல்லும் பக்தர்களும் பயன்பெற உள்ளனர்.
இதேபோல், ராமேஸ்வரம் – தாம்பரம் இடையேயான புதிய ரயில் சேவையையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார்.
வாலாஜாபேட்டை – ராணிப்பேட்டை வழித்தடத்தில் அமையவிருக்கும் 4 வழிச்சாலைக்கும் அடிக்கல் நாட்டுகிறார். சோழபுரம் – தஞ்சாவூர் பிரிவில் அமைக்கப்பட்டுள்ள புதிய 4 வழிச்சாலையை நாட்டுக்கு அர்ப்பணிக்கவுள்ள பிரதமர் மோடி, கடலூர் பூண்டியாங்குப்பம் – சட்டநாதபுரம் பிரிவில் அமைக்கப்பட்டுள்ள புதிய 4 வழிச்சாலையையும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காகத் திறந்து வைக்கவுள்ளார்.
மொத்தமாக 8 ஆயிரத்து 300 கோடி ரூபாய் மதிப்பிலான ரயில் மற்றும் சாலை திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்காக அர்ப்பணிக்கவுள்ளார்.