டாஸ்மாக் விவகாரம் குறித்து விவாதிக்கக் கோரி சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்ட அதிமுக உறுப்பினர்கள் ஒருநாள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்று உத்தரவை சபாநாயகர் அப்பாவு வாபஸ் பெற்றார்.
சட்டப்பேரவையில் கேள்வி-நேரம் முடிந்தபின், டாஸ்மாக் விவகாரம் குறித்து விவாதிக்கக்கோரி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அனுமதி கோரினார். அப்போது குறுக்கிட்ட சபாநாயகர், நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள வழக்கை, அவையில் பேச இடமில்லை எனக்கூறி அனுமதி மறுத்தார்.
இதனைத் தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமிக்கு பேச அனுமதி அளிக்காததால் அதிமுக எம்எல்ஏக்கள் பதாகைகளை ஏந்தி கோஷம் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். இதனை அடுத்து, அதிமுக எம்எல்ஏக்களை வெளியேற்றச் சபாநாயகர் உத்தரவிட்டார். பேரவையில் இருந்து அதிமுகவினர் வெளியேற்றப்பட்ட நிலையில், அவர்களை ஒருநாள் சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார்.
பின்னர் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஒரு பிரச்சனையைக் கிளப்பி, அதற்குரிய விளக்கம் கொடுத்தும் திருப்தியடையாமல் வெளிநடப்பு செய்துள்ளதாகக் கூறினார்.
மேலும், அதிமுக உறுப்பினர்கள் மீதான சஸ்பெண்ட் உத்தரவைத் திரும்பப்பெறுமாறு கேட்டுக்கொண்டார். முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்று அதிமுகவினரை மீண்டும் அவை நடவடிக்கைகளில் கலந்து கொள்ள அனுமதி வழங்குவதாகக் கூறிய சபாநாயகர் அப்பாவு, அதிமுகவினர் பேட்ஜை கழற்றிவிட்டு அவைக்கு வருமாறு அறிவுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து, சபாநாயகரின் உத்தரவை ஏற்று சட்டையில் இருந்த பேட்ஜை அதிமுக உறுப்பினர்கள் கழற்றிவிட்டு அவை நிகழ்வில் பங்கேற்றனர்.