விமான நிலையங்களில் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதைத் தடுக்க மோப்ப நாய்கள் முக்கிய பங்காற்றி வருவதாகச் சென்னை சுங்க மண்டல தலைமை ஆணையர் தெரிவித்துள்ளார்.
சென்னை சுங்க மண்டலத்தில், மோப்ப நாய்களை இணைக்கும் அறிமுக விழா மற்றும் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. திருவொற்றியூர் அருகே உள்ள சரக்கு பெட்டக முனைய வளாகத்தில் நடைபெற்ற விழாவில், சென்னை சுங்க மண்டல தலைமை ஆணையர் குமார், சென்னை விமான நிலைய சுங்க ஆணையரகத்தின் முதன்மைஆணையர் சீனிவாசா நாயக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில், பஞ்சாப்பில் 9 மாதங்கள் பயிற்சி பெற்ற 3 மோப்ப நாய்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. லேப் வகையைச் சேர்ந்த 3 நாய்களையும் பயிற்சியாளர்கள் வழிநடத்தினர்.
பயிற்சியாளர்கள் கொடுக்கும் உத்தரவுகளுக்கு, மோப்ப நாய்கள் சிறப்பான முறையில் செயல்பட்டு அதிகாரிகளை வியப்பில் ஆழ்த்தின. பின்னர் நிகழ்ச்சியில் பேசிய சென்னை சுங்க மண்டல தலைமை ஆணையர் குமார், விமான நிலையங்களில் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதைத் தடுக்க மோப்ப நாய்கள் முக்கிய பங்காற்றி வருவதாகத் தெரிவித்தார்.
மேலும், போதைப்பொருட்களைப் புழக்கத்தில் விடும் நபர்களைக் கண்டுபிடிக்க மோப்ப நாய்கள் உதவுவதாகவும் கூறினார்.