கேம் ஆஃப் த்ரோன்ஸ் தொடரின் மூலம் மிகப் பிரபலமான திகில் ஓநாய், மீண்டும் நிஜமாகவே ஊளையிடப் போகிறது. 13,000 ஆண்டுகளுக்கு முன் அழிந்துபோன ஓநாயை Colossal Biosciences விஞ்ஞானிகள் உயிர்ப்பித்து சாதனை படைத்துள்ளனர். அழிந்து போன ஓநாயை இத்தனை ஆண்டுகளுக்குப் பின் எப்படி உயிர்ப்பித்தனர் என்பது பற்றிய ஒரு செய்தித்தொகுப்பு.
(George R. R. Martin) ஜார்ஜ் ஆர்.ஆர்.மார்ட்டின் எழுதிய நாவல் தான் கேம் ஆஃப் த்ரோன்ஸ் என்ற பெயரில் தொடராக உருவானது. எட்டு சீசன்கள் முடிந்து விட்டாலும், உலகமெங்கும் உள்ள மக்களைக் கவர்ந்தது யார் என்றால் அந்த தொடரில் தோன்றிய திகில் ஓநாய் தான்.
”கேம் ஆஃப் த்ரோன்ஸ்” தொலைக்காட்சி தொடரில் இடம்பெற்ற பயங்கரமான கொடூர ஓநாய், ஏனோசியன் டைரஸ் ஆகும். இது பண்டைய காலத்தில் வட அமெரிக்காவில் சுற்றித் திரிந்த மிக மோசமான வேட்டையாடும் ஓநாய் இனமாகும். அகலமான தலை, அடர்த்தியான முடிகள் மற்றும் வலுவான தாடைகள் கொண்ட கொடூர ஓநாய்கள், சராசரி சாம்பல் ஓநாய்களை விட சுமார் 25 சதவீதம் பெரியவையாகும். 5 அடி உயரமுள்ள கொடூர ஓநாய் அதிகபட்சமாக சுமார் 200 பவுண்டுகள் எடை கொண்டதாகும்.
இந்த கொடூரமான திகில் ஓநாயைச் செல்லப் பிராணியாக வீட்டில் வளர்க்கப் பலர் ஆசைப்பட்டனர். அந்த ஆசையைத் தான், விஞ்ஞானிகள் இப்போது உண்மையாக்கி இருக்கிறார்கள். கடைசி பனி யுகம் (Pleistocene era) ப்ளீஸ்டோசீன் சகாப்தம் என்று அழைக்கப்படுகிறது. அந்த காலத்தில் அமெரிக்காவின் காடுகளில் Mammoth மாமூத்கள் உட்படப் பல அரிய விலங்குகளுடன் மிகவும் மோசமான ஓநாய் இனமும் சுற்றித் திரிந்தது. அதுதான், இன்றைக்கு உலகில் உள்ள அனைத்து வகை ஓநாய்களுக்கும் நேரடி மூதாதையர் என்று கருதப்படுகிறது.
அழிந்து போன இந்த பண்டைய உயிரினங்கள் பற்றி அவற்றின் புதைபடிவ எச்சங்களிலிருந்து தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் நிறைய விஷயங்களைக் கண்டுபிடித்துள்ளனர். குறிப்பாக, கலிபோர்னியாவில் உள்ள La Brea Tar குழிகளில் சுமார் 3,600 கொடூரமான ஓநாய் புதைபடிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த கொடூர ஓநாய்கள் 10–16,000 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி? ஏன்? அழிந்தன என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
இந்நிலையில் தான், குளோனிங் மற்றும் மரபணு-எடிட்டிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அமெரிக்க விஞ்ஞானிகள் மூன்று திகில் ஓநாய் குட்டிகளை உருவாக்கியுள்ளனர்.
14 மரபணுக்களில் 20 முக்கியமான மரபணு மாறுபாடுகளைக் கண்டுபிடித்த விஞ்ஞானிகள், ஒரு புதிய இரத்த குளோனிங் முறையைப் பயன்படுத்தி, இரண்டு டஜன் சாம்பல் ஓநாய் மரபணுக்களைப் பகுப்பாய்வு செய்தனர்.
13,000 ஆண்டுகள் பழமையான பல் மற்றும் 72,000 ஆண்டுகள் பழமையான மண்டை ஓட்டிலிருந்து டிஎன்ஏவை எடுத்து, ஆரோக்கியமான திகில் ஓநாய் குட்டிகளைப் படைத்துள்ளனர். உயிரியல் துறையில் பல்லுயிர் இழப்பைச் சரி செய்வதற்கான சாதனையாக இது பார்க்கப்படுகிறது.
கடந்த அக்டோபர் ஒன்றாம் தேதி, இரண்டு ஆண் ஓநாய் குட்டிகள் பிறந்ததாகவும், கடந்த ஜனவரி 30ஆம் தேதி பெண் ஓநாய்க்குட்டி பிறந்ததாகவும் கொலோசல் பயோசயின்சஸ் அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. ஓநாய்க் குட்டிகளுக்கு ரோமுலஸ், ரெமுஸ் மற்றும் கலீசி என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்த மூன்று ஓநாய்களும் விலங்கியல் பூங்காவில் சுமார் 2,000 ஏக்கர் பரப்பளவில் வெளியிடப்படாத ஒரு இடத்தில் வளர்கின்றன. பாதுகாப்புப் பணியாளர்கள் கண்காணிப்பில் வளரும் இந்த ஓநாய் குட்டிகளை ட்ரோன்கள் மற்றும் நேரடி கேமராக்கள் மூலமும் கண்காணித்து வருகிறார்கள்.
மூன்று புதிய குட்டிகள் உண்மையிலேயே கொடூர ஓநாய்களா என்பது குறித்து நிபுணர்கள் கேள்விகள் எழுப்பலாம் என்றாலும், 2028ஆம் ஆண்டில் கம்பளி மாமூத்தை மீண்டும் கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக Colossal தெரிவித்துள்ளார்.