பெண்ணிடம் அவமரியாதையாகப் பேசிய காவல் உதவி ஆய்வாளரை வாக்கி டாக்கியில் பேசிய போதே காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி திருச்சி டிஐஜி வருண்குமார் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அரியலூர் காவல் ஆய்வாளர் மற்றும் பணியாளரிடம் வாக்கி டாக்கி மூலம் பேசிய திருச்சி சரக டிஐஜி வருண்குமார், அனைத்து மகளிர் காவல் நிலையத்தை அரசு எதற்காக உருவாக்கியது என எழுப்பினார்.
அதற்குப் பதிலளித்த அரியலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர், மகளிர் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுவதற்காக உருவாக்கப்பட்டது எனத் தெரிவித்தார்.
இதன் பின்னர் பாலியல் புகார் கொடுக்க வந்த பெண்ணிடம் உதவி ஆய்வாளர் அவமரியாதையாக நடந்து கொண்ட செய்தி தன் கவனத்திற்கு வந்துள்ளதாகவும், இதனை ஏன் கண்டு கொள்ளவில்லை எனவும் டிஐஜி வருண்குமார் கேள்வி எழுப்பினார்.
உதவி ஆய்வாளர் அப்படி எதுவும் பேசவில்லை என்றும், தெரியாமல் பேசியிருப்பார் எனவும் காவல் ஆய்வாளர் அதற்குப் பதிலளித்துள்ளார். இதனைக் கேட்டு ஆவேசமடைந்த டிஐஜி வருண்குமார், இப்படிப் பேசுவதற்கு வெட்கமா இல்லை எனக் காவல் ஆய்வாளரிடம் கோபமாகத் தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து , வாக்கி டாக்கி வழியாக டிஐஜி வருண்குமாரிடம் காவல் ஆய்வாளர் மன்னிப்பு கோரினார்.
பின்னர் பேசிய டிஐஜி வருண்குமார், புகார்தாரர்களிடம் ஒழுங்கீனமாகப் பேசிய ஆடியோ கிடைத்தால் அவற்றையும் வெளியிடுவேன் எனக் காவல் அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார்.