தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீ வைகுண்டத்தில் கடந்த 2023ஆம் ஆண்டு இறுதியில் ஏற்பட்ட பெருமழையில் வீடுகளை இழந்த தவிக்கும் தங்களுக்கு ஓராண்டைக் கடந்தும் நிவாரணத் தொகை வழங்கப்படவில்லை என மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். அதுகுறித்த செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம்.
கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் மிக அதிக கன மழை பெய்தது. இதன் காரணமாகத் தாமிரபரணி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது . இந்த வெள்ளப்பெருக்கால் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் மிகக் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. மேலும் வெள்ள நீர் சூழ்ந்து, பல்வேறு பகுதிகளில் வீடுகள் இடிந்து தரைமட்டமாகின.
இதேபோல் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம், புதுக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீடுகள் முற்றிலுமாக இடிந்து விழுந்து சேதமானது. இதனால் வீடுகளை இழந்து மக்கள் பரிதவித்தனர். தொடர்ந்து அப்பகுதியில் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
கனமழையால் 50 வீடுகள் முற்றிலுமாக சேதம் அடைந்ததாக அதிகாரிகள் கணக்கீடு செய்தனர். மேலும் தமிழக அரசு சார்பாகச் சேதமடைந்த ஒவ்வொரு வீட்டிற்கும் 4 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் வழங்குவதாக அதிகாரிகள் மக்களிடம் தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து ஸ்ரீ வைகுண்டம் பேரூராட்சி நிர்வாகம் பாதிக்கப்பட்ட மக்கள் வீடு கட்டுவதற்காக ஆணை வழங்கி, முதல் தவணையாக 10 ஆயிரம் ரூபாயும் வழங்கியுள்ளது.
அதன் பிறகு ஒவ்வொரு கட்ட கட்டுமான பணிக்கும் குறிப்பிட்ட தொகை வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதை நம்பி பாதி, சேதமடைந்த வீடுகளை மக்கள் முழுமையாக இடித்துள்ளனர்.
சிலர் கட்டுமான பணிகளை ஆரம்பித்துப் பாதி கட்டிட வேலையை முடித்துள்ளனர். ஆனால் ஓராண்டைக் கடந்தும் இதுவரை தமிழக அரசு மீதத் தொகையான 4 லட்ச ரூபாயை வழங்கவில்லை எனப் பாதிக்கப்பட்ட மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
அரசு அறிவித்த நிவாரணத்தை வழங்கவில்லை எனில் ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் ஒப்படைக்க உள்ளதாகப் பாதிக்கப்பட்ட மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நிவாரண தொகையை நம்பி ஓராண்டுக்கும் மேலாக வீடுகளை இழந்து தவித்து வரும் மக்களின் வாழ்வாதாரத்தை மீட்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.