அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானதையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார், திரிஷா, பிரசன்னா உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் ‘குட் பேட் அக்லி’. மைத்ரி மூவீஸ் நிறுவனம் தயாரித்துள்ள இத்திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
பெரும் எதிர்பார்ப்புகிடையே இத்திரைப்படம் இன்று தமிழகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாகச் சென்னையில் ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் வெளியானதையொட்டி ரோகினி திரையரங்கம் கொண்டாட்டத்தால் களைகட்டியது.
காலை 9 மணியளவில் முதல் காட்சி வெளியிடப்பட்ட நிலையில், ரசிகர்கள் ஆட்டம் பாட்டத்துடன் சென்று திரைப்படத்தை உற்சாகமாக கண்டு ரசித்தனர். இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனும் ரோகினி திரையரங்கில் ரசிகர்களுடன் ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தை கண்டு மகிழ்ந்தார்.
நெல்லையின் அனைத்து திரையரங்குகளிலும் இன்று ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் வெளியானதை ஒட்டி அஜித் ரசிகர்கள் அதிகாலை முதலே திரையரங்குகளின் முன்பு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக நெல்லை சந்திப்பு அருகே உள்ள ராம் திரையரங்கம் முன்பு குவிந்த ரசிகர்கள் பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை காந்திபுரம் 100 அடி சாலையில் உள்ள திரையரங்கிலும் அஜித் ரசிகர்கள் ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் ரிலீஸை உற்சாகமாகக் கொண்டாடினர்.
அதேபோல, சேலம் பிரகாஷ் திரையரங்கிலும் இன்று ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் வெளியானதை ஒட்டி, ரசிகர்கள் ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் திரையரங்க வளாகம் ரசிகர்களின் ஆரவாரத்தில் களைகட்டியது.