அம்பேத்கரின் பிறந்த நாளான ஏப்ரல் 14-ம் தேதி சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அம்பேத்கர் மணி மண்டபத்தை, பொதுமக்கள் மரியாதை செலுத்தும் வகையில் காலை 7.30 மணி முதல் திறக்க வேண்டும் எனத் தமிழக அரசுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அம்பேத்கர் பிறந்த நாளின்போது கடந்த ஆண்டுகளில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளைச் சுட்டிக்காட்டி, நடப்பாண்டில் அம்பேத்கர் மணி மண்டபத்தை அதிகாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்து வைக்க உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி பரத சக்ரவர்த்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை அம்பேத்கர் மணி மண்டபத்தைத் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், மணிமண்டபத்திற்கு வருகை தருவோரின் வசதிக்காகத் தேவையான குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அரசு தரப்பு விளக்கத்தைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி, அன்றைய தினம் மாநிலம் முழுவதும் இருந்து ஏராளமானோர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், மணி மண்டபத்தைக் காலை 7.30 மணி முதல் திறக்க வேண்டும் எனத் தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.
மேலும், அம்பேத்கரின் பிறந்த நாள் அமைதியாகவும், அர்த்தமுள்ளதாகவும் கொண்டாடப்படுவதை உறுதி செய்யத் தமிழக அரசும், காவல்துறையும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.