விழுப்புரம் பவர் ஹவுஸ் பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் புதுச்சேரி சாலையில் பவர் ஹவுஸ் பகுதியில் சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்பு முத்துமாரியம்மன் கோயில் கட்டப்பட்டது.
தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்ட கோயிலை அகற்ற கோரி தொடரப்பட்ட வழக்கில், கோயிலை இடித்து அகற்றுமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி, நகராட்சி அதிகாரிகள் கோயிலை இடிக்க வந்தபோது பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால், கோயிலை அப்புறப்படுத்தும் பணியை அதிகாரிகள் நிறுத்தினர். இந்நிலையில், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மீண்டும் கோயிலை இடிப்பதற்காக நகராட்சி அதிகாரிகள் வந்தபோது அவர்களுடன், பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட 20க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.