ஸ்டார் வார்ஸ் படத்தில் வருவது போல, உயர் சக்தி வாய்ந்த லேசரைப் பயன்படுத்தி, எதிர்கால ஆயுதத்தை இந்தியா வெற்றிகரமாகச் சோதனை செய்துள்ளது. உள்நாட்டிலேயே தயாரிக்கப் பட்ட இந்த ஆயுத அமைப்பு, நாட்டின் பாதுகாப்பு தொழில்நுட்பத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாகும். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
நவீனமாகி வரும் உலகில் போர் தந்திரங்களும், ஆயுதங்களும் அதிநவீனமாகி வருகின்றன. குறிப்பாக, நடந்து வரும் ரஷ்யா-உக்ரைன் போரில், ட்ரோன்கள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
ட்ரோன்களைக் கண்காணித்து, லேசர் ஆற்றலின் மூலம் துல்லியமாகச் சுட்டு வீழ்த்தும் ஆயுதத் திறனை அமெரிக்கா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் கொண்டுள்ளன. இஸ்ரேலும் லேசர் மூலம் ட்ரோன்களை அழிக்கும் திறன் கொண்ட ஆயுத அமைப்பை உருவாக்க முயற்சித்து வருகிறது.
இந்நிலையில், உயர் சக்தி கொண்ட லேசர் கற்றைகளைப் பயன்படுத்தி ட்ரோன்களை அழிக்கும் ஆயுத அமைப்பை இந்தியா உருவாக்கி சாதனை படைத்துள்ளது. இந்த அதிநவீன ஆயுத அமைப்பு கொண்ட நான்காவது நாடாக இந்தியா உள்ளது.
ஆந்திராவின் கர்னூலில், புதிய 30 கிலோவாட் லேசர் ஆற்றல் ஆயுதத்தை டி.ஆர்.டி.ஓ. எனப்படும் இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் வெற்றிகரமாகச் சோதனை செய்துள்ளது.
சோதனையின் போது, இந்தியாவின் லேசர் அடிப்படையிலான ஆயுத அமைப்பு, பல ட்ரோன்களை முறியடித்ததாகவும், எதிரி கண்காணிப்பு சென்சார்களையும், ஆண்டெனாக்களையும் அழித்ததாகவும் கூறப் பட்டுள்ளது. மேலும், மின்னல் வேகத்தில் துல்லியமாக சில நொடிகளுக்குள் இலக்கை தாக்கி அழித்ததாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.
ஹைதராபாத்தில் உள்ள DRDO வின் உயர் ஆற்றல் அமைப்புகள் மற்றும் அறிவியல் மையம் (CHESS), LRDE, IRDE, DLRL ஆகியவை இணைந்து இந்த அதிநவீன ஆயுத அமைப்பை உருவாக்கி உள்ளன. முழுவதும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட இது இந்திய பாதுகாப்புத் தொழில் நுட்பத்தில் ஒரு மைல் கல்லாகும்.
ஒரு ரேடார் அல்லது அதன் உள்ளமைக்குப்பட்ட எலக்ட்ரோ ஆப்டிக் (EO) அமைப்பு மூலம் கண்டறியப்பட்டவுடன், ( LASER -DEW )லேசர்-டியூ ஒளியின் வேகத்தில் இலக்குகளைக் குறிவைத்து ஒரு உயர் சக்தி வாய்ந்த சக்தி லேசரைப் பயன்படுத்த முடியும் என்று நிரூபிக்கப் பட்டுள்ளது.
இந்த வெற்றிகரமான சோதனை மூலம், உயர் சக்தி கொண்ட லேசர் DEW அமைப்பைக் கொண்ட உலகளாவிய வல்லரசுகளின் பிரத்தியேக கிளப்பில் இந்தியாவும் இணைந்துள்ளது என்று DRDO தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளது.
இந்த லேசர் அடிப்படையிலான ஆயுதம் 5 கிலோமீட்டர் எல்லைக்குள் உள்ள ட்ரோன்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் போன்ற வான்வழி அச்சுறுத்தல்களைக் குறிவைத்துத் தாக்கக் கூடியவை என்றும், தகவல் தொடர்பு மற்றும் செயற்கைக்கோள் சிக்னல்களைத் தடுப்பது போன்ற மின்னணு போர் திறன்களையும் கொண்டவை என்றும் கூறப்பட்டுள்ளது.
விரைவில், லேசர் ஆயுத அமைப்பு இந்தியப் படையில் சேர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும்,வருங்காலத்தில் அதிக தூரங்களுக்குச் சென்று தாக்கும் வகையில் இதன் திறன் அதிகரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீரர்களைச் சுமந்து செல்லக்கூடிய மிகவும் குறுகிய தூர வான் பாதுகாப்பு அமைப்பு (VSHORAD), வீரர்களைச் சுமந்து செல்லக்கூடிய பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை (MPATGM) மற்றும் LCA மார்க் II ஆகியவை வடிவமைக்கப்படும் என்று DRDO தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்னும் ஓராண்டுக்குள், இதுபோல் பல அதிநவீன ஆயுத அமைப்புகளை இந்தியா உருவாக்கும் என்று DRDO தலைவர் சமீர் வி காமத் கூறியுள்ளார். ஆளில்லா வான்வழி வாகனங்களின் (UAV) பயன்பாடு அதிகரித்து வருவதால், மேம்பட்ட ட்ரோன் எதிர்ப்பு தொழில்நுட்பங்களுக்கான தேவையும் அதிகரித்துள்ளது.
இந்த சூழலில், லேசர் அடிப்படையிலான ஆயுத அமைப்பை உருவாக்கிய இந்தியா, நாட்டின் பாதுகாப்பு தொழில் நுட்பத்தில் சர்வதேச அளவில் முன்னணியில் உள்ளது. குறைந்த செலவு- அதிக செயல்திறன் காரணமாக,பாரம்பரிய ஆயுதங்கள் மற்றும் ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளை விட இந்த ( LASER -DEW ) லேசர்-டியூ அமைப்பு ஒரு சாதனையாகும்.
எனவே, உலகெங்கிலும் உள்ள ராணுவ அமைப்புகளால்,இந்தியாவின்( LASER -DEW ) லேசர்-டியூ வுக்கு நல்ல சந்தை இருக்கிறது என்றும் கூறப்படுகிறது.