ஆரணி அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்ய போதிய உபகரணங்கள் இல்லாததால் இறந்தவரின் சடலத்தைத் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து அருகிலேயே சக நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த ஒண்டிகுடிசை கிராமத்தைச் சேர்ந்த கன்ராயன் என்பவர் தனது விளைநிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது திடீரென வலிப்பு நோய் ஏற்பட்டு மயக்கமடைந்தார்.
உடனடியாக, உறவினர்கள் அவரை ஆரணி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அங்குப் பரிசோதித்த மருத்துவர்கள் கன்ராயன் இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
ஆனால் அவரது உடலைப் பிரேதப் பரிசோதனை செய்யப் பிணவறைக்கு அனுப்பி வைக்காமல், 8 மணி நேரமாகத் தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவர்கள் வைத்துள்ளனர்.
மேலும் அருகிலேயே சக நோயாளிகளுக்கும் சிகிச்சை அளித்துள்ளனர். கன்ராயன் உடலைப் பிணவறைக்கு அனுப்பி வைக்காததால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மருத்துவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்துத் தகவலறிந்து வந்த போலீசார், உறவினர்களைச் சமரசம் செய்து சடலத்தை வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 8 மணி நேரமாக உடலைப் பிரேதப் பரிசோதனை செய்யாமல் மருத்துவர்கள் அலைக்கழித்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.