பாலியல் வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் கருத்து சர்ச்சைக்குள்ளான நிலையில், நீதிபதிகள் கவனத்துடன் கருத்துகளை வெளிப்படுத்த வேண்டும் என
உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் இரு வெவ்வேறு பாலியல் வழக்குகளில் நீதிபதிகள் சர்ச்சைக்குரிய வகையில் கருத்துகளைத் தெரிவித்து, குற்றஞ்சாட்டப்பட்டவர்களை பிணையில் விடுவித்தனர்.
குறிப்பாக, பெண் ஒருவர் அளித்த பாலியல் புகார் குறித்து கருத்து தெரிவித்த அலகாபாத் நீதிமன்றம், சம்மந்தப்பட்ட பெண் மதுபோதையில் ஆண் நண்பரின் வீட்டுக்குச் சென்று அவராகவே பிரச்சனையை வரவேற்றதாகக் கூறியிருந்தது.
அலாகாபாத் உயர்நீதிமன்றத்தின் இத்தகைய கருத்துகள் பெரும் சர்ச்சைக்குள்ளான நிலையில், இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்ற அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது பேசிய நீதிபதிகள், அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் ஏற்கெனவே ஒரு நீதிபதி தனது தீர்ப்பில் சர்ச்சை கருத்தைத் தெரிவித்திருந்த நிலையில், தற்போது மற்றொரு பாலியல் வழக்கில் தீர்ப்பளித்த மற்றொரு நீதிபதியும் சர்ச்சை கருத்தைத் தெரிவித்துள்ளதாகக் குறிப்பிட்டனர்.
நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் பிரச்சனையை வரவழைக்கும் அளவுக்குச் சர்ச்சை கருத்துகளைத் தெரிவிப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பிய அவர்கள், கருத்துகளை கூறும்போது நீதிபதிகள் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர்.